KKR vs SRH: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா

விளையாட்டு

IPL 2024: 2024 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அவரின் முடிவு துவக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டாப் ஆர்டரில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சபாஷ் அகமது என அனைவரும் சொற்ப ரன்களுக்கு பவர்-பிளேவுக்கு உள்ளேயே தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினர்.

பின் ஜோடி சேர்ந்த ஹெயின்ரிச் கிளாஸன் மற்றும் ராகுல் திரிபாதி இணை, விக்கெட் வீழ்ச்சியையும் பொருட்படுத்தது அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதன்மூலம், ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 92 ரன்களை குவித்திருந்தது.

ஆனால், ராகுல் திரிபாதி 55 (35) ரன்களுக்கும், கிளாஸன் 32 (21) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் மளமளவென தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து ஃபெவிலியன் திரும்பினர்.

ஆனால், கடைசியில் பெட் கம்மின்ஸ் மற்றும் சற்று ஆறுதல் அளித்து 30 (24) ரன்கள் சேர்க்க, 19.3 ஓவர்களில் 159 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணி ஆல்-அவுட் ஆனது.

பின் 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ரஹ்மானுல்லா குர்பாஸ் (23 ரன்கள்) மற்றும் சுனில் நரைன் (21 ரன்கள்) அதிரடி துவக்கம் அளித்தனர். இதனால், பவர்-பிளேவிலேயே அந்த அணி 63 ரன்களை குவித்தது.

இவர்கள் அட்டமிழந்த பிறகு, ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர், பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டனர்.

ஷ்ரேயஸ் 24 பந்துகளில் 58 ரன்களும், வெங்கடேஷ் 28 பந்துகளில் 51 ரன்களும் விளாச, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 13.4 ஓவர்களிலேயே எட்டியது.

8 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு அபார வெற்றியை பதிவு செய்து, அந்த அணி இந்த 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கு பிறகு, முதல் முறையாக கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மே 22 அன்று இதே மைதானத்தில் நடைபெறவுள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணியுடன், 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி விளையாடும்.

அந்த 2வது குவாலிஃபையர் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 24 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நுழைவுத் தேர்வில் மோசடி: எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!

டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!

ஹெல்த் டிப்ஸ்: நாள்தோறும் 10,000 நடைகள் என்பது சாத்தியமா?

பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *