மாறிவிட்ட வாழ்க்கை முறையால் ஏற்படும் தொப்பை அல்லது தொல்லைகளிலிருந்து விடுபட முயற்சி செய்வோர், நாள்தோறும் 1000 அளவில் நடைகளை மேற்கொண்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறார்கள். அதை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் நாள்தோறும் 10,000 நடைகள் நடந்தால்தான் ஆரோக்கியமான உடல் சாத்தியம் என்ற ஒரு நம்பிக்கை பரவலாகி வருகிறது.
இந்த எண் எங்கிருந்து தொடங்கியது, யார் இந்த எண்ணை நிர்ணயித்தார்கள், யாருக்காக இது நிர்ணயிக்கப்பட்டது, இதற்கான காரணம் என்ன… உண்மை நிலவரம் என்ன?
ஜப்பானில் 1960-ம் ஆண்டு ஒருவர் நாள்தோறும் 10,000 நடைகள் நடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம், பீடோ மீட்டர் என்ற கருவி அதிகம் விற்பனையானது. இதற்கு நல்ல சந்தைப்படுத்துதலாக இந்த 10,000 நடைகள் உதவியது.
இந்த எண் கிட்டத்தட்ட எப்படி வந்தது என்றால், அடைவது சற்றுக் கடினமாகவும் இந்த எண்ணைப் பார்க்க கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்ததால்தானாம்.
“வெறுமனே எத்தனை நடை நடக்கிறோம் என்பதை கணக்கிடுவதில் தவறில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதன்படி நடக்கலாம்.
உண்மையான பயன் என்பது பல்வேறு காரணிகளால்தான் வருகிறது. உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் உடல்நலனுக்குத் தேவையானது என்பது வேறுபடுகிறது.
உடல் நன்கு இயக்க நிலையில் இருப்பது கட்டாயம்தான். ஆனால், உடலை வறுத்தி அதிக நடைகள் நடப்பது எதிர்மறை பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்” என்கிறார்கள் பிட்னஸ் பயிற்சியாளர்கள்.
மேலும், “கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்குங்கள். அதிகம் நடப்பதை விடவும் படிகள் ஏறுவது சிறந்தது. அருகிலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்.
நடக்கும்போது இசையை ரசிக்கலாம். கதை கேட்கலாம். நடைப்பயிற்சிக்கு இடையே இடைவெளி விடலாம். ஒரே நடைப்பயிற்சியில் முழு எண்ணிக்கையையும் முடிக்க நினைக்க வேண்டாம். ஆனால், ஒரு நாளைக்கு 4000 நடைகளுக்கும் கீழ் குறைய வேண்டாம்.
உங்கள் வயது, உடல்நிலை, கட்டுக்கோப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு உங்கள் நடை இலக்கை தீர்மானிக்கலாம்.
அடிப்படையாக நாம் அங்கும் இங்கும் செல்வதை நடைப்பயிற்சியாக கணக்கில் எடுக்க முடியாது. உங்களால் நடக்க முடிந்த அளவை நிர்ணயித்துக்கொண்டு அதைவிட சில 1000 அடிகள் இலக்காகக் கொண்டு படிப்படியாக அதிகரிக்கலாம். எடுத்ததும் பெரிய எண் வேண்டாம்.
உங்களின் அன்றாட வேலை நேரத்தைப் பொறுத்து நடைப்பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம்.
உண்மையிலேயே உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிக்கு நேரம் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் நடைப்பயிற்சி.
அதைமட்டும் புரிந்துகொண்டால் இலக்குகள் எதுவும் உங்களை பாதிக்காது” என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!
ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு
“பார்க்கிங்” : 5 மொழிகளில் ரீமேக்!