Senthilbalaji's resignation letter

டிஜிட்டல் திண்ணை:  ’அப்பவே சொன்னேன்…’ பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலின் டென்ஷன்!  செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதம்! 

அரசியல்

வைஃபை ஆன் செய்தபோது அமைச்சர்  பொன்முடி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று (ஜூலை 18) ஆஜராக சென்று வீடு திரும்பிய காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி எம்பி வீட்டில் அமலாக்கத்துறையினர் ஜூலை 17  பகல் முழுதும் சோதனை நடத்திய நிலையில், இரவு அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறையினர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே  நள்ளிரவு கடந்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் பொன்முடியை மீண்டும் ஜூலை 18 ஆம் தேதி நான்கு மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு தன் மகன் கௌதம சிகாமணியோடு  அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார் . 4 மணியில் இருந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக பொன்முடியிடம் விசாரணை தொடர்ந்தது.  அமலாக்கத்துறை அலுவலகத்தில் போலீஸும் குவிக்கப்பட்டது.

பொன்முடியிடம் விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை 6.21 மணிக்கு வெளியிட்டது. அதாவது அமைச்சர் பொன்முடி, எம்பி கௌதம சிகாமணி ஆகியோரது வீட்டில்  குற்ற ஆவணங்கள், 81.7 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. மேலும் 13 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டு கரன்சியும் கைப்பற்றப்பட்டது. பொன்முடியின் வங்கிக் கணக்கில் ஃபிக்சடு டெபாசிட் ஆக  41.9 கோடி ரூபாய் முடக்கப்பட்டது’ என்று அறிவித்தது இ.டி.

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘அமலாக்கத் துறை நடவடிக்கைகள் எதிர்பார்த்தது தான். இன்னும் பல கொடுமைகள் நடக்கும், எதையும் சட்டப்படி சந்திப்போம்’ என்று கூறினார்.

அதேநேரம் முதலமைச்சர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிலும், ‘ஓரிரு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு முன்புதான் ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியா கூப்பிட்டு, ‘மத்திய அரசு நம்மை  தீவிரமா கண்காணிக்குறாங்க. அதனால எந்த பரிவர்த்தனைக் குறிப்புகளையும்  துண்டுச் சீட்டுலயோ, போன்லயோ,  லேப் டாப்லயோ வச்சிக்காதீங்க. ஜாக்கிரதையா இருங்க’னு எச்சரிச்சேன்.

ஆனா, சீனியர் மினிஸ்டர் இவரே இவ்வளவு அஜாக்கிரதையா இருக்கலாமா?’ என்று டென்ஷனைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பொன்முடியிடம் இ.டி விசாரணை தொடர்ந்த நிலையில் இரவு 10 மணிக்கு அமலாக்க அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார் பொன்முடி.

இதற்கிடையே செந்தில்பாலாஜி புழல் சிறையில் ஏ வகுப்பு வசதிகளோடு  தனது முதல் நாள் சிறை வாழ்க்கையை கழித்திருக்கிறார்.  ஜூலை 17 மாலை அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டாலும் சிறை மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கே நிலவிய சூழலை செந்தில்பாலாஜியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அங்கே ஏற்கனவே அட்மிட் செய்யப்பட்டிருந்த கைதிகள் எழுப்பிய குரலால் செந்தில் பாலாஜி தூங்கவே இல்லை. மறுநாளான இன்று செந்தில்பாலாஜிக்கு ஏ வகுப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக புழல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஏ வகுப்புக்கு உண்டான வசதிகளை மட்டுமே அளிக்க வேண்டும் என்றும்,  அதைத் தாண்டிய சொகுசு வசதிகள் ஏதும் செய்யப்பட வேண்டாம் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது ஆட்சி மேலிடம். ஏனென்றால் சிறைக்குள் சட்டத்தை மீறி செந்தில்பாலாஜிக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால், அதை அடிப்படையாக வைத்தே செந்தில்பாலாஜி மீதான வழக்கை டெல்லி அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற அமலாக்கத் துறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் தான் அரசின் முன்னெச்சரிக்கைக்குக் காரணம் என்கிறார்கள்.

இதற்கிடையே காவேரி மருத்துவமனையில் இருக்கும்போதே செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார் என்ற தகவலும்  காவேரி வட்டாரத்தில் கிடைக்கிறது.  என்னால் முதல்வருக்கு தர்ம சங்கடம் என்று செந்தில்பாலாஜி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இது அவராக கொடுத்த ராஜினாமாவா அல்லது ஆட்சி மேலிடத்தால் எழுதி வாங்கப்பட்ட ராஜினாமாவா என்ற விவாதங்களும் நடக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

 அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

“இன்னும் கொடுமைகள் நடக்கும்” – அமலாக்கத்துறை சோதனை குறித்து ஸ்டாலின்

+1
0
+1
6
+1
1
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *