ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் யார் போட்டியிடுவது என இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி சார்பில் அறிவிப்போம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். அந்த தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் ஈரோட்டில் இன்று (ஜனவரி 19) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் உள்ளிட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
இதன்பின் ஜிகே வாசன் அளித்த பேட்டியில், “அதிமுகவின் மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் மற்றும் அதன் வெற்றி குறித்து ஆலோசித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன்.
அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட தேர்தல் குறித்து அவருடன் கலந்து பேசினேன்.
தமிழக அரசியல் சூழல் மற்றும் மத்திய அரசியல் சூழல் குறித்தும் விரிவாக பேசினோம். நேற்று தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.
நேற்று இரவு என்னை தொடர்பு கொண்டு அவர் தொலைபேசியில் பேசினார்.
இன்றைக்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் பேசியிருக்கிறோம். எங்களுடைய இலக்கு கூட்டணி நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.
அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது.
அதற்கேற்றவாறு மாநிலத்தில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத ஆட்சியாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இன்றைக்கு திமுக உள்ளது. மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.
எதிர்மறை வாக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவையெல்லாம் எங்கள் கூட்டணிக்கு சாதகமாக தேர்தல் சமயத்தில் அமையும் என்று முழுமையாக நம்புகிறோம்.
இதை வைத்து ஒத்த கருத்தோடு ஓரிரு நாட்களிலே எங்களது கூட்டணி கட்சிகள் கலந்து பேசி அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்” எனறார்
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணியை அணுக வேண்டும். அந்த அணுகு முறையை 100% உறுதிப்படுத்துவதற்கு தலைவர்கள் நல்ல முடிவை எடுப்போம். கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்பது முக்கியமான கட்சி. எனவே வெற்றிக்காக ஒத்த கருத்துடைய முடிவை எடுப்போம்” என்று தெரிவித்தார்.
கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டார். திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்ற நிலையில் யுவராஜா 58,396 வாக்குகள் பெற்று அதாவது 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
பிரியா