ஆளுநர் மீது புகார்களை அடுக்கிய திமுக, கூட்டணி கட்சிகள்!

அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனுப்பியுள்ள மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது போன்று தமிழகத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம், திராவிடம் திருக்குறள் கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் ஆளுநரை திரும்பப் பெரும் மனுவில் கையெழுத்திட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர்.பாலு அழைப்பு விடுத்தார்.

அப்படி கையெழுத்து பெறப்பட்ட மனுக்கள் இன்று (நவம்பர் 9) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த மனுவில்,

“தமிழகம் மற்றும் தமிழக மக்கள் தொடர்பான அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கவனத்தை கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கடிதத்தை அனுப்புகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக தெரிவிக்கிறது. எனினும் பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர் தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சர் தலைவராக கொண்ட அமைச்சரவை குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனென்றால் ஆளுநர் மாநிலத்தில் அரசியலமைப்பு கருவியின் ஒரு அச்சாணி ஆவார்.

அரசியல் நிர்ணய அவை விவாதங்களின் போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள், ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கும் பொது மக்களுக்கும் ஒரு வழிகாட்டியாக, தத்துவாசனாக, நண்பராக விளங்க வேண்டும் என்றே கருதினர்.

முக்கியமான அரசமைப்புச் சட்டப் பணிகளை செய்ய வேண்டிய ஆளுநர் தனது கடமையில் ஒரு சார்பற்றவராகவும் நேர்மையானவராகவும் மிகச் சரியானவராகவும் இருக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிரோட்டம் என்பது மக்களாட்சி தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவத்தான் நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்து தங்கள் உயிரை இழந்தார்கள்.

ஆளுநராக இருப்பவர் அரசியலமைப்பின்பாலும் அதுகுறித்து நிற்கும் மதிப்புகளின்பாலும் முழு நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சோசலிச மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் ஏதாவது ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஒரு ஆளுநர் அத்தகைய அரசியலமைப்பின் பெயரிலான பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் ஆகிறார்.

மேலும் அரசியல் சார்பு தன்மை கொண்டவராக ஒரு ஆளுநர் மாறுவாரேயானால் அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார்.

அரசமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும் செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்கு சாவு மணி அடிப்பதுமான செயலாகும்.

அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அறிஞர்கள் ஒருநாளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரை இன்றி தாமதப்படுத்துவதையோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அத்தகைய சூழலை எதேச்சாதிகாரம் என்றே குறிப்பிட முடியும். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல் தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

தாங்கள் நன்கறிந்தபடியே, 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்நாட்டை சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு பாதையில் முன்னகர்த்தி செல்வதற்கான ஆட்சி உரிமையை மாநில மக்கள் திமுகவிற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக திமுக அரசும் இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

எனினும் தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவது அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவை இன்றி காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவை இன்றி காலம் தாழ்த்துகிறார்கள் என்று குறிப்பிட வேதனை அடைகிறோம். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காக பணியாற்றுவதை தடுப்பதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

நமது அரசமைப்புச் சட்ட நடைமுறையின் படி அமைச்சரவை அல்லது சட்டப்பேரவையின் முடிவுக்கு மேலான அதிகாரம் உள்ளவராக ஒரு ஆளுநர் இருக்க முடியாது என்பது மிகத் தெளிவு. அது முழுவதும் சட்ட வரைவின் தேவை குறித்து விரிவாக விவாதிக்கும் சட்டப்பேரவையின் தனி உரிமை ஆகும்.

சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட உடன் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஆளுநர் அதனை மாநில மக்களின் முடிவாக கருதியே செயலாற்ற வேண்டும்.

எங்கள் மாநிலத்தில் ஆளுநர் தமது முதன்மையான பணியை ஆற்றுவதில்லை.

கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான 97வது அரசியலமைப்பு திருத்த சட்டம், 2011 ஆனது உச்ச நீதிமன்றத்தால் 20.07.2021 அன்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை தொடர்ந்து நம் நாட்டின் சட்டத்திற்கு இணங்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983.ஐ கொண்டு வரும் வகையில 7.1.2022 அன்று சட்ட வரைவு எண் -11ஐ நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பத்து மாதங்களாக இந்த சட்ட வரைவு ஆளுநர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்படாமல் சிதைவுற்று வருகிறது.

2021 ஆம் ஆண்டு சட்டம் முன்வரைவு எண் – 43ஆன தமிழ்நாடு இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சட்டம், (நீட்) நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 13-9.2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் சட்ட பிரிவு (200/201) இன்படி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக பல மாத காலம் காலம் தாழ்த்தினார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு முன் குடியரசு தலைவராக இருந்தவரை 28.12.2021 அன்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவையும் வழங்கினோம். இதன்பின் 5.1.2022 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக மற்றொரு கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் ஆளுநர் மேற்கூறப்பட்ட சட்ட வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் (ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால்), குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தானே கையில் எடுத்துக்கொண்டு சட்டப்பேரவையின் முடிவை கேள்விக்குள்ளாக்கி சட்டவரைவை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
ஆளுநரின் இத்தகைய நடத்தையால் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட வேண்டிய சூழல் உருவாகி நீட் விலக்கு சட்ட வரைவு மீண்டும் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநில சட்டப்பேரவை வெளிப்படுத்தும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதையே இது காட்டுகிறது. இத்தகைய செயல்பாடுகள் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.

பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளை சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஆளுநர் கெடுவாய்ப்பாக இந்நாட்டின் மதச்சார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொது வெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அடிக்கடி சமுதாயத்தில் பிளவு படுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார்.

இந்த தேசத்தின் மதச்சார்பின்மை பண்புகளில் மாறா பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது. தாம் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு சிறிதும் பொருத்தமற்ற வகையில் அவர் ஆபத்தான பிளவுபடுத்தும் நோக்கிலான மத ரீதியான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார்.

மக்கள் மனங்களில் வெறுப்பை தாண்டி சமூக பதற்றத்தை உண்டு பண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைகின்றன. அண்மையில் அவர் உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்து உள்ளது என்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பையே அவமதிப்பதாகும். இந்தியாவானது தனது அரசியல் அமைப்பையும் சட்டங்களையும் சார்ந்துள்ளதே தவிர எம்மதத்தையும் சார்ந்தது இல்லை.

கடந்த காலங்களிலும் ஆளுநர் சனாதன தர்மத்தை போற்றுவது தமிழிலக்கியத்தின் ஆணிவேர் ஆன திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது திராவிட மரபையும் தமிழ் பெருமையையும் விமர்சிப்பது என இதே போல் மத ரீதியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளையும் பெருமையையும் ஆளுநரின் இத்தகைய பேச்சுகள் புண்படுத்தியுள்ளன.

ஆளுநரின் சிந்தனையானது அரசியல் விருப்பு வெறுப்புகள் கட்சி சார்பு அரசியலில் அல்லது பதவிக்காலம் முடிந்த பின்பு வரக்கூடிய எதிர்கால பதவிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். மக்கள் நலனை குறித்து அவரது கவனம் இருக்க வேண்டும்.

அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு அவர் இணங்கி செல்ல வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்று முடிவு செய்ய ஆளுநர் தமிழ்நாட்டில் தேர்தல்கள் எதிலும் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விடுகிறார்.

சர்க்காரி ஆணையம் தனது அறிக்கையில் ஆற்றல் நேர்மை நடுநிலைமை மற்றும் அரசியல் நற்பண்புகளை வெளிப்படுத்தும் ஆளுநர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

அண்மை காலங்களில் ஒன்றிய அரசில் ஆளுங்கட்சியாக உள்ளவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமாக இருக்கும்/இருந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு கைமாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது.

இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ, நடுநிலைத் தன்மையோ இல்லை. இவர்கள் அரசுக்கும் மாநில மக்களுக்கும் சங்கடமாக உருவெடுக்கிறார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளை தாக்கும் வாய்ப்புக்காக துடிக்கும் ஒன்றிய அரசின் முகவர்களாக மட்டுமே மாநில தலைநகரங்களில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதால் ஆளுநர்களின் பிம்பம், நமது கூட்டுறவு கூட்டாட்சியியலை உரிச்சிதைத்து மக்களாட்சியை அழித்துவிடும். இத்தகைய சீர்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக தமிழக ஆளுநர் விளங்குகிறார்.

தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன், தமிழ்நாட்டு மக்களின் சேவைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன் என்று அரசியல் சட்ட பிரிவு 159ன் கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக, அவர் மத வெறுப்பை தாண்டி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.

சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின் பால் வெறுப்புகளையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேச துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும்.

தனது அரசியல் நடத்தையாலும் செயல்களாகும் ஆளுநர் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட தனது பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்து விட்டார். ஆகவே பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

அரசியல் சட்டப்பிரிவு 156(1) இன் படி, குடியரசு தலைவர் விரும்பும் வரையில் ஆளுநர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என். ரவி அவர்களை உடனடியாக நீக்கி அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியா

என் தீர்ப்பு ஒரு விதிவிலக்கு : நீதிபதி பட்

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *