தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத அயோத்தி ராமர் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் 2.7 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதன் குடமுழுக்கு விழா வரும் 22-ம் தேதி விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்.
இதுதவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர்.
நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன.
தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர்,
ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அயோத்தி குடமுழுக்கு விழாவிற்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜயகாந்த் குடும்பத்திற்காக ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!
போராட்டம் ஒத்திவைத்தற்கான காரணம்: சிஐடியூ சவுந்தரராஜன் விளக்கம்!