அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 15) தீர்ப்பு வழங்கியது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையை இடங்களில் சோதனை நடத்தியது.
ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஆஞ்சியோகிராம் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பை பாஸ் சர்ஜரிக்கு ஓமந்தூரார் மருத்துவமனை பரிந்துரைத்தது.
நேற்று மாலை 4 மணியளவில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், செந்தில் பாலாஜிக்கு நிரந்தர ஜாமீன் கிடைக்கும் வரை அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதால் அவரது நீதிமன்ற காவலை நிராகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அதுபோன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றக்ககோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “செந்தில் பாலாஜியின் குடும்ப மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.
அதனால் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நேற்று மாலை 4.30 மணிக்கு நீதிபதி அல்லி விசாரிக்கத் தொடங்கினார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,
அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேஷன், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் காவலை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி அல்லி.
ஏற்கனவே அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பிரியா
சமரசம் செய்யாமல் களத்தில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா
சில மாதங்கள் சிறை: செந்தில்பாலாஜியின் சட்ட நிலை!