ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ள மனம் இடம் தராது அதற்கு உதாரணமாக இருக்கிறது நாளை(ஜூன் 16) வெளிவர இருக்கும் பொம்மை திரைப்பட வியாபார தகவல்கள்.
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி படம் தயாரானது. அதன்பின்னரும் படம் வெளியாகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் வியாபாரம் தொடர்பான விசயங்களில் சமரசம் செய்துகொள்ள படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஜே.சூர்யா தயாராக இல்லை.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் (ANGEL STUDIOS MH LLP) நிறுவனத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவே பொம்மை படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, இணையதள வெளியீட்டு உரிமை ஆகியனவற்றிற்கு சுமார் எட்டுகோடி விலை நிர்ணயம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா.
அவ்வளவு விலை கொடுத்து வாங்க யாரும் தயாராக இல்லை. விலையை குறைக்க எஸ்.ஜே.சூர்யாவும் தயாராக இல்லை.
திரையரங்குகளில் படத்தை வெளியிட வியாபாரம் பேசியபோது, விநியோகஸ்தர்கள் யாரும் இப்படத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இல்லை.
இவை எதையும் சட்டை செய்யாத எஸ்.ஜே.சூர்யா ரெட்ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி மூலம் படத்தை திரையிட கொடுத்துள்ளார்.
விநியோக அடிப்படையில் படத்தை வெளியிடுபவர் முன்பணம் கொடுப்பார்கள், அதற்காக பங்கு தொகையில்15 விழுக்காடு கமிஷன் கொடுக்க வேண்டும் , தயாரிப்பாளர். அதனால் எனக்கு முன்பணம் வேண்டாம் எனக் கூறி வசூலில் 7% கமிஷன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இப்படி எந்த இடத்திலும் இறங்கிப்போகாமல் படத்தை முழுமையாக நம்பி படத்தை வெளியிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.
படத்தை தயாரிக்க நெகட்டிவ் ஃபைனன்ஸ் முறையில் அவர் கடன் வாங்கினார். அக்கடனை அவர் நடிக்கும் படங்களில் கிடைக்கும் சம்பளத்தை வைத்தே அடைத்துவிட்டார். அதனால் எதற்கும் இறங்கிப்போகாமல் இருந்தார் என்று சொல்கிறார்கள்.
இராமானுஜம்
TNPL: டிஆர்எஸ் முறையீடு செய்தது ஏன்? அஸ்வின் விளக்கம்!
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று மீண்டும் விசாரணை!