செந்தில்பாலாஜி தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 14) மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதை எதிர்த்து அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவையும் தாக்கல் செய்தது. இரு தரப்பும் நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.
செந்தில்பாலாஜியின் உடல்நிலையும், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைகளில் இருந்த விதிமீறல்களும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதங்களாக எடுத்து வைக்கப்பட்டன. இன்று முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி இந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்குகிறார்.
இதற்கிடையே செந்தில்பாலாஜியை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்கள் அப்போது சட்ட ரீதியாக என்ன நிலவரம் என்ன என்பதை செந்தில்பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு 45 இன் கீழ் கீழமை நீதிமன்றத்தின் நீதிபதி, ‘குற்றம் சாட்டப்பட்டவர் எந்த குற்றமும் செய்யவில்லை’ என்று 100 சதவிகிதம் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும்.
ஆனால் இந்த வழக்கில் அதற்கு வாய்ப்பில்லை. செந்தில்பாலாஜி குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முகாந்திரங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு அமலாக்கத் துறை விசாரணைக்கும் வழிகாட்டியுள்ளது.
எனவே ஜாமீன் என்பதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.
மேலும் இப்போது செந்தில்பாலாஜி இதய அறுவை சிகிச்சை நடைபெற வேண்டியிருப்பதால் அவர் சில மாத காலம் மருத்துவ ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அவரது மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அவர் மேலும் சில மாதங்களை சிறையில் கழிக்க வேண்டியதிருக்கும்” என்கிறார்கள் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள்.
இதை செந்தில்பாலாஜியிடமும் நேற்று மருத்துவமனையிலேயே தெரியப்படுத்தியிருக்கிறார்கள். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட சமீபத்திய அமலாக்கத்துறை கைதுகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள் வழக்கறிஞர்கள்.
–வேந்தன்
செந்தில்பாலாஜியின் இதயம்: ரிப்போர்ட் இதுதான்!
ஆனந்த் மஹிந்திராவுக்கு பிடித்த அழகிய கிராமங்கள்- லிஸ்ட் இதோ!