ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் அரிச்சல் முனையில் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 21) சிறப்பு வழிபாடு செய்தார்.
மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஜனவரி 19 அன்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், புதுப்பிக்கப்பட்ட டிடி தமிழ் தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்த பிரதமர் நேற்று காலை திருச்சி புறப்பட்டார்.
அங்கு ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதசுவாமியை தரிசனம் செய்த பிரதமர் மோடி, பிற்பகல் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை தரிசனம் செய்தார். அங்கு ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, இன்று காலை தனுஷ்கோடி, அரிச்சல் முனை புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி செல்லும் வழியில் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் அரிச்சல் முனை கடற்கரையில் மலர் தூவி வழிபட்டார். பின்னர் அரிச்சல் முனை கடற்கரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.
தொடர்ந்து தனுஷ்கோடி கோதண்டராம கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா