செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு இடையீட்டு மனு!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கை விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் பெற்றதான மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் மே 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், பணம் பெற்ற மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 13-ஆம் தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்ததாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டரீதியாக கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
செல்வம்
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: காமராஜர் குறித்து தமிழிசை பகிர்ந்த சுவையான சம்பவம்!
சந்திராயன் 3: புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!