நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் திமுக எம்.எல்.ஏ.வான கடலூர் ஐயப்பன், சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் இன்று (ஜூலை 11) மீண்டும் அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.
நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்வில் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாக கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐயப்பனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது திமுக தலைமை.
இந்நிலையில் மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் ஜூலை 4ஆம் தேதி பதிப்பில், பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ திடீர் ஆலோசனைக் கூட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
அதில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐயப்பன் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தியதையும்…. எம்.எல்.ஏ ஐயப்பனின் வட்டாரத்தில் நிலவும் அதிருப்தியை அறிந்து பாஜக தலைமையே ஐயப்பனை அணுகியதையும் அந்த செய்தியில் விரிவாக பதிவு செய்திருந்தோம்,
மின்னம்பலம் செய்திக்குப் பிறகு பல ஊடகங்களும் ஐயப்பனைப் பற்றிய செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், அமைதியாக இருந்த ஐயப்பன் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று, “ நான் எந்த கட்சிக்கும் போகவில்லை சாகும் வரையில் திமுகவில்தான் பணியாற்றுவேன்” என்று அறிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி, கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் 12 பேரை கலந்துகொள்ள கூடாது என்று தடுத்துவிட்டதால் 12 கவுன்சிலர்கள் கூட்டத்துக்குச் செல்லாமல் புறக்கணித்தார்கள்.
இந்த நிலையில் பாஜக தரப்பு, ஐயப்பனைப் பாஜகவில் இணைத்துக்கொண்டு, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவோடு கடலூர் மாநகராட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டது. இதையறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் ஐயப்பனை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ள அமைப்புத் துணைச் செயலாளர் அன்பகம் கலையிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
இதையடுத்து அன்பகம் கலை, ஐயப்பனைத் தொடர்புகொண்டு தன்னை சந்திக்கச் சொன்னார். உடனே ஐயப்பன் சென்னை சென்று அன்பகம் கலையை சந்தித்தார். முதல்வரின் ஆலோசனைப்படியும், வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதித் தரும்படி ஐயப்பனிடம் கேட்டுள்ளார் அன்பகம் கலை.
ஐயப்பன் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததோடு… அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது பல புகார்களைத் தெரிவித்து, “அவரிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை எனக்குக் கொடுக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கேட்டுள்ளார். “இப்போதைக்கு உங்களிடம் கடிதம் மட்டுமே வாங்கச் சொல்லியிருக்கிறார் தலைவர். உங்கள் கோரிக்கையை நான் தலைவரிடம் சொல்கிறேன். பிற்காலத்தில் நல்லது நடக்கும்” என்று ஐயப்பனுக்கு தைரியம் சொல்லியிருக்கிறார் அன்பகம் கலை.
இந்தப் பின்னணியில்தான் கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐயப்பனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த ஆர்டரை வாபஸ் பெற்றுக்கொண்டு, மீண்டும் இன்று ஜூலை 11ஆம் தேதி, கட்சியில் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது அண்ணா அறிவாலயம்.