சேலத்தில் இன்று (ஜனவரி 21) நடைபெறும் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டுப் பந்தலில் எம்.பி கனிமொழி கொடியேற்றினார்.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டின் நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
பிறகு மாநாட்டுத் திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் பெரியார், அம்பேத்கர், முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வானில் ஜொலித்தன.
அதுமட்டுமின்றி திமுகவின் சின்னமான உதயசூரியன், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவை ட்ரோன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மாநாட்டிற்காக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சொந்த வாகனங்கள், பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்து சேலத்தில் குவிந்தனர். மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்காக அசைவ உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மாநாட்டுத் திடலில் உள்ள 100 அடி உயர கொடிகம்பத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை எம்.பியுமான கனிமொழி கொடியேற்றி இளைஞரணி மாநாட்டை தொடங்கி வைத்தார். கொடியேற்றும் போது முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து இன்று மாலை வரை இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சிறப்புரையாற்ற உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கமல்ஹாசன், கார்த்திக்குக்கு மாற்றாக யோகி பாபு?
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12