வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கருத்துரிமித்த கட்சிகளோடு சேர்ந்து செயல்படும் என்று சோனியா காந்தி, ’தி ஹிந்து’ ஆங்கில இதழில் எழுதிய அடுத்த நாளில்… காங்கிரஸின் வார்த்தைப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், அவரோடு பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லியிலே ராகுல் காந்தியையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து பேசியுள்ளார்கள்.
இந்திய அளவில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை அடுத்து அதிக எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களில் பீகாரும் தமிழ்நாடும் வருகின்றன. (பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகளும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன) இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் டெல்லியில் ராகுல் காந்தியையும் கார்கேவையும் தேடிச்சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளரிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த சித்தாந்த போர்க்களத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அடியை இன்று எடுத்து வைத்திருக்கிறோம். இந்தியாவுக்காக இணைந்து நிற்போம், இந்தியாவுக்காக போராடுவோம்’ என்றார்.
இந்த சந்திப்பையடுத்து நிதீஷ் குமார் நேற்று இரவு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வும் இருந்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நிதீஷ்குமார் நல்லதொரு முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறார். அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சி இப்போது மிகவும் தேவையான ஒன்று. நாடு மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.
இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து நடந்த அரசாங்கங்களில் மிகவும் ஊழல் அதிகமாக நடக்கும் அரசாங்கம் இந்த மோடி அரசுதான். நிதீஷ் குமாரின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் வாகனத்தில் நாங்களும் ஏறிவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸோடு தற்போது சுமுக உறவில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளோடு பிரச்சினை இல்லை. அதேநேரம் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தள் போன்ற கட்சிகள் பாஜகவை எதிர்ப்பது போல் காங்கிரசோடும் சற்று இடைவெளியை வைத்திருக்கின்றன.
இந்த கட்சிகளை ஒருங்கிணைத்து அவற்றை காங்கிரஸோடு ஒரே எதிர்க்கட்சிகள் அணிக்குக் கொண்டுவருவதுதான் நிதீஷ்குமார் முன்னெடுத்திருக்கும் பணி. டெல்லியில் தொடங்கிய நிதீஷின் இந்த சந்திப்புகள் இதன் பொருட்டு தொடரும் என்கிறார்கள் ஐக்கிய ஜனதா தள கட்சியினர்.
இதேநேரம் நிதீஷ்குமார் ஒரேநாளில் ராகுல் காந்தி, கார்கே, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை சந்தித்ததைத் தொடர்ந்து பாஜக இதற்கு பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாட்டில் இப்போது பலரும் பிரதமர் நாற்காலி மீது ஆசை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நிதீஷ்குமார் அந்த வகையில் பிரதமர் பதவிக்கு ரொம்பவே ஆசைப்படுகிறார்.
அதனால்தான் அவர் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தேடிச் சென்று ராகுல் காந்தியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி சந்தித்திருக்கிறார். ஆனால் நிதீஷ்குமார் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 2024 ஆம் ஆண்டு பிரதமர் நாற்காலி மோடிக்குதான். அந்த இடம் காலியாக வாய்ப்பே இல்லை” என்றார்.
நிதீஷ்குமாரின் தொடர் சந்திப்புகள் பாஜகவுக்கு எதிராக காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒற்றைக் குடைக்குள் திரட்டுமா, இந்த முயற்சிக்கு அவரே தலைமை தாங்குவாரா, அதை காங்கிரஸ் முழு மனதோடு ஏற்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
–வேந்தன்
பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
ஊழல் பட்டியல் : அண்ணாமலை வெளியிட்ட DMK Files!