பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக நிர்வாகம் ஒரு சட்டம் போட, அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட… அநேகமாக இந்தப் போராட்டப் படலம் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தொடரும் போல.
“பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘நான் பார் கவுன்சில் உறுப்பினர் ஆகும்பட்சத்தில், வழக்கறிஞர்களுக்கு இந்தந்த நன்மைகளைச் செய்வேன், இந்தந்த உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன், இந்தந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்’ என்று பரப்புரை செய்கிறார்கள். தங்கள் வாக்குறுதிகளை அச்சடித்து துண்டுப் பிரசுரம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் நீதிமன்ற வளாகங்களில்தான் செய்கிறார்கள்” என்று வெளிமாநில பார் கவுன்சில் தேர்தல் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் மட்டும், போட்டியிடும் வேட்பாளர் நான் யார் என்பதைக்கூட அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரசாரத்தை சுய விளம்பரம் என்று வர்ணிக்கிறார்கள் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். ஆனால், வேட்பாளர்களோ, ‘இது சுய விளம்பரம் அல்ல, சுய அறிமுகம். இது பிரசாரத்தின் அடிப்படை’ என்கிறார்கள்.
இந்த எதிர்ப்புக் குரல் பார் கவுன்சில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் எடுபடாமல் போகவேதான், வழக்கம்போல நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டிருக்கிறது. நீதி தேவதைக்கு மட்டும் வாய் இருந்தால்… நீதிமன்றத்தின் செம்மாந்த சுவர்களின் மீதேறி உச்சிக் குமிழின் மீது நின்றுகொண்டு, ‘பார் கவுன்சில் தேர்தலில் நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்?’ என்று கூக்குரல் இட்டிருப்பாள்.
ஆம்… இந்த நிபந்தனையையும் எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.
சுய அறிமுகம் என்பதை சுய விளம்பரம் என்று உருவகப்படுத்தி, பார் கவுன்சில் தேர்தல் அலுவலர்கள் அறிவித்திருக்கும் நிபந்தனைகளை எதிர்த்து ஆனந்தமுருகன் தொடுத்த வழக்கில்,
“தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வரும் 28-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்டுள்ளார்கள். இது விதிமீறலாகும்.
தேர்தல் என்றாலே வாக்குறுதிகள் அவசியமாகும். எனக்கு வாக்களிக்குமாறு நான் கேட்கும்போது, வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மைகள் செய்யப் போகிறேன் நான் வாக்குறுதிகள் அளிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால நன்மைகள் கருதி எனக்கு வாக்களிப்பார்கள்.
நான் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை உயர்த்துவது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தேன். எனக்கு வழக்கின் காரணமாக வழக்கறிஞர் சேம நல நிதி உயர்த்தப்பட்டது. நான் செய்ததைச் சொல்லி வாக்கு கேட்க விரும்புகிறேன். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உத்தரவு எனது பணிகளைத் தடுப்பதாக உள்ளது. எனவே பார் கவுன்சில் தேர்தல் அலுவலர்களின் இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.
கரகாட்டக்காரன் படத்தில் வரும் பல வசனங்கள் இன்றும் மக்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன. அவற்றில், ‘இந்த உலகத்துலயே கார் வச்சிருக்கிற கரகாட்டக் கோஷ்டின்னா அது நம்ம கோஷ்டிதான்’ என்று கவுண்டமணி சொல்வதாக ஒரு வசனம் வரும்.
அதை அப்படியே கொஞ்சம் மாற்றி, ‘இந்தியாவிலேயே பார் கவுன்சில் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேணும்னு கோர்ட்டுக்குப் போனவர்கள் என்றால் நம் தமிழ்நாடுதான்’ என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு தேர்தல் நடக்கிறது. அதில் வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான உறவு என்பதே வாக்குறுதிகள் வழங்குவதும், வேட்பாளர்கள் தங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கோருவதும்தான். இதற்கே தடைவிதிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
இந்த உத்தரவை உற்று நோக்கினால்தான் தெரியும்… பார் கவுன்சிலில் புதியவர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பழையவர்கள் செய்யும் தந்திரம் இது, என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன். அப்படியென்றால் பழையவர்கள் யார்?
’’துண்டுப் பிரசுரம் கொடுக்கக் கூடாது, வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது என்ற தடை பெரும்பான்மையாகவும் நேரடியாகவும் யாரை பாதிக்கிறது? தேர்தலில் போட்டியிடும் புதிய வேட்பாளர்களைதான் பாதிக்கிறது. அதாவது அறிமுகம் இல்லாத வழக்கறிஞர்கள் வேட்பாளர்களாக நிற்பதை இந்த உத்தரவுகள் பாதிக்கின்றன. அப்படியானால் என்ன அர்த்தம்? ஏற்கனவே வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் அறிமுகம் பெற்றவர்களுக்கே சாதகம் செய்வதாக அமைந்திருக்கின்றன இந்த உத்தரவுகள். ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள் என்றால் அவர்கள் பார் கவுன்சிலின் பழைய நிர்வாகிகள்.
ஆக பார் கவுன்சிலில் ஏற்கனவே பதவி வகித்த முன்னாள் நிர்வாகிகளுக்குதான் வழக்கறிஞர்களிடம் அறிமுகம் தேவையில்லை. இவர்களைத் தவிர இன்ன பிறர் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வாக்கு சேகரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் வாக்குறுதிகளைக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு உணர்வு சார்ந்த அந்த நெட்வொர்க்கே போதுமானதாக இருக்கிறது.
ஆக… பழைய நிர்வாகிகளுக்கும், சாதி-மதம் என்று குறுகிய அடிப்படையில் வாக்குகளை வளைக்க முயலுபவர்களுக்கும் மட்டுமே இந்த பிரச்சாரத் தடை என்பது பாதிப்பை உண்டாக்காது. மற்றபடி பார் கவுன்சில் நிர்வாகத்தில் புதிய ரத்தம் பாய வேண்டும் என்று முண்டியடித்து முன்னேறி வருகிற புதியவர்களை, ‘நீ உன்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளக் கூடாது’ என்று தடுக்கின்றன இந்த நிபந்தனைகள்.
இதில் இருந்தே இந்த உத்தரவுகள் யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்ற நிலவரம் தெரிந்திருக்கும்’’ என்கிறார் வழக்கறிஞர் ஷாஜி செல்லன்.
ஆம்.. ஒரே நோக்கம். பார் கவுன்சிலில் புதிய ரத்தம் பாய்ந்துவிடக் கூடாது என்பதே. இது சாத்தியமா?
(பயணம் தொடரும்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]