102 தொகுதிகள் … 16 கோடி வாக்காளர்கள்: விறுவிறு ஓட்டுப்பதிவு!

அரசியல்

18 வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கியது.

17-வது மக்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய பிரதமர், புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 1.87 லட்சம் வாக்குச்சாவடிகளில் 16.63 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

18 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தென் சென்னை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் இருந்தும், கிரண் ரெஜிஜு அருணாச்சல பிரதேசம் மேற்கு பகுதியில் இருந்தும்,

சர்பானந்த சோனோவால் அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியில் இருந்தும், எல் முருகன் நீலகிரியில் இருந்தும், ஜிதேந்திர சிங் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் தொகுதியில் இருந்தும், பூபேந்திர யாதவ் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் தொகுதியில் இருந்தும், அர்ஜுன் மேக்வால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

அதுபோன்று மூன்று முன்னாள் முதல்வர்கள் இன்று தேர்தலில் களம் காண்கின்றனர். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் இருந்தும், அருணாச்சலப் பிரதேசம் முன்னாள் முதல்வர் நபம் துகி அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியில் இருந்தும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் மேற்கு திரிபுரா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்குவதை ஒட்டி காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6.23 கோடியாகும். 10.92 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளில் 3.32 லட்சம் பேர்  ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 1,749 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அதில் 679 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு 1,048 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 120 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்ற நிலையில், 873 ஆண் வேட்பாளர்கள் 77 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் ஒன்பது வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலை தவிர அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் கவனத்திற்கு….

வாக்காளர்கள் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *