கடந்த சில மாதங்களாகவே தலைமை செயலகம் முழுவதும் ஒரே முணுமுணுப்பு.
பல துறைகளிலிருந்தும் அனுப்பப்படும் கோப்புகள் நிதித் துறையில் தேங்கி நிற்பதாகவும், நிதி அமைச்சகம் பல கோப்புகளை விளக்கங்கள் கோரி திருப்பி அனுப்புவதாகவும் பல துறைகளின் அதிகாரிகள் புலம்புகின்றனர்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணி துறை, உயர்கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை குறித்த கோப்புகளே மிக அதிகம்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடமே நேரடியாக துறை செயலர்களும், அமைச்சர்களும் புகார் பட்டியலை வாசித்துள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க நேற்று (செப்டம்பர் 24) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் போது,
திராவிட கொள்கைகளை வளர்க்கும், ஏற்கும், கோப்புகள் என்றால் உடனடியாக கையெழுத்திடுவதாகவும், பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், தலைமை செயலர், துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தாலும், அது கொள்கைகளுக்கு முரணாக இருந்தால், அந்த கோப்புகளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் அனுமதியின்றி ஒரு நிதியமைச்சர் இவ்வாறு செயல்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், “முதல் அமைச்சருக்கோ எனக்கோ இருக்கின்ற மிக தனிப்பட்ட குணம் என்னவென்றால் நாங்கள் எந்த திராவிட கருத்தை கூறுகிறோமோ,
அந்த கருத்தை, தத்துவத்தை, கொள்கையை – ஒவ்வொரு முறையும் உரையாற்றும் போது, கோப்புகளை தயாரிக்கும் போது, கோப்புகளில் கையெழுத்திடும் போது, நிதியை ஒதுக்கும் போதும், மறுக்கும் போதும் என, எல்லாவற்றிலும் அந்த அடிப்படையில் தான் செயல்படுகின்றோம்.
இதுவரை 5000 கோப்புகள் என்னுடைய கையெழுத்துக்காக இதுவரை வந்துள்ளது.
அதில் பல நூறு கோப்புகளை திருப்பி அனுப்பியுளேன். நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு கோப்பு, நிதி துறை அல்லாத, வேறு துறை கோப்புகள் நிதி அமைச்சரின் கையெழுத்திற்கு வருகிறது என்றால் அதில் சுமார் பத்திலிருந்து பனிரெண்டு அதிகாரிகள், தலைமை செயலர், துறை அமைச்சர்கள் கையெழுத்து இட்டபின் தான் என்னிடம் வருகின்றது.
ஆனாலும் அத்தனை நூறையும், விளக்கம் கேட்டோ, திருத்தத்திற்கோ, மறுத்தோ நான் திருப்பி அனுப்பிருக்கேன்.
அந்த அளவிற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுப்பது முதலமைச்சர் மட்டுமே.
இல்லையென்றால் இது போன்று ஒரு நிதியமைச்சர் செயல்பட முடியாது.
முதலமைச்சருக்கு தெரியும் எதற்காக நிதியமைச்சர் இதுபோல விளக்கங்கள் கேட்டிருப்பார் என்று.
நமது கொள்கையை வளர்க்கும், ஏற்கும், கோப்புகள் என்றால் உடனடியாக கையெழுத்து.
தெளிவில்லாத அல்லது கணக்கு சரி இல்லாத, ஏற்கனவே (கடந்த ஆட்சியில்) செய்ததை போன்று திரும்பவும் செய்கின்றனரா, கொள்கைகளுக்கு முரணாக உள்ளது என்றால் கோப்புகள் திருப்பி அனுப்பப்படும்” என்று பேசியுள்ளார் நிதியமைச்சர்.
நிதி அமைச்சரின் இந்த பேச்சு, மற்ற துறை அமைச்சர்கள், தலைமை செயலர், துறை செயலர்கள் ஆகியோர், தெளிவற்று கோப்புகள் தயாரிக்கின்றனரா?
மற்றும் திராவிட கொள்கைகளுக்கு மாறாக திட்டம் தீட்டி அதற்கு நிதி கோருகின்றனரா? என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் இவ்வாறு தான் கோப்புகளை திருப்பி அனுப்புவதற்கு முதலமைச்சரின் ஆதரவு உண்டு என நிதி அமைச்சர் பேசியிருப்பது அமைச்சர்கள் மற்றும் பல துறை செயலர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
மதுரை எய்ம்ஸ்: ப.சிதம்பரம் நக்கல்!