Kerala Governor assembly speech

ஒன்றே கால் நிமிடத்தில் முடிந்த ஆளுநர் உரை- புது டிரண்ட்!

அரசியல்

மாநில அரசோடு கடுமையான மோதல் போக்கை மேற்கொண்டு வரும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று (ஜனவரி 25) சட்டமன்றத்தில் ஆளுநர் உரை வாசிப்பதில் புது உத்தியைக் கையாண்டிருக்கிறார்.  ஒன்றே கால் நிமிடத்தில் ஆளுநர் உரையை முடித்துவிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2023 ஜனவரி 9 ஆம் தேதி கூட்டத் தொடர் தொடங்கியபோது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அதற்கு ஒப்புதல் அளித்திருந்த உரையில் சில பகுதிகளை நீக்கியும் சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தது பெரும் சர்ச்சையானது. உடனடியாக எழுத்துபூர்வமான அரசின் உரையே அவைக்குறிப்பில் ஏறும் என்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவர, ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். ஒருவருடம் ஆகியும் இந்த சம்பவத்தின் சூடு குறையவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்னும் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை.

இதற்கிடையே கேரள சட்டமன்றம் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்ற அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ஆளுநருக்கும் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது, இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டை விட கேரளாவில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகவே இருக்கிறது.

இந்த சூழலில்தான் இன்று கேரள சட்டமன்றத்தில் உரையாற்ற வந்தார் ஆளுநர் ஆரிப் முகமது கான். அவருக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். ஆனால் முதல்வரின் முகம் பார்க்காமல் திரும்பிக் கொண்டார் ஆளுநர்.

Kerala Governor assembly speech

சபாநாயகர் ஏ.என். ஷம்சீரும், முதல்வர் பினராயி விஜயனும் ஆளுநரை உள்ளே அழைத்துச் சென்றனர். ஆளுநர் உரை தயாராக வைக்கப்பட்டிருந்தது. 61 பக்கத்துக்கு உரை தயாரிக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கும் முன் தேசிய கீதம் ஒலித்தது.

ஆளுநர் உரையாற்றத் தொடங்கினார். 61 பக்க உரையில் முதல் பத்தியை வாசித்து முடித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், சட்டென 61 ஆவது பக்கத்துக்குத் தாவி கடைசி பத்தியை வாசித்து தனது உரையை ஒன்றே கால் நிமிடத்தில் முடித்துவிட்டார்.

இதனால் தேசிய கீதம் ஒன்றரை நிமிட இடைவெளியில் இருமுறை ஒலித்தது. ஆளுநர் உரை முடிந்ததும் சட்டமன்றமும் முடிந்துவிட்டது.

இதுகுறித்து கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், “ஆளுநர் தனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றிவிட்டார். அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை உரையை அவர் வாசித்தார். முதல் மற்றும் கடைசி பாராக்களை படிப்பதில் தவறில்லை. அதேநேரம் அவர் ஏன் அந்த இரண்டு பாராக்களை மட்டும் படிக்கத் தேர்ந்தெடுத்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. கவர்னர் வாசித்த கடைசி பாராவில் மாநில அரசின் கண்ணோட்டம் நன்றாகவே கூறப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறை குறித்த அரசின் அணுகுமுறை கடைசிப் பத்தியில் தெளிவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

நம் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத குறுகிய ஆளுநர் உரை இதுதான். விரைவில் தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையோடு சட்டமன்றம் தொடங்க இருக்கிற நிலையில் கேரளாவில் இப்படி முடிந்திருக்கிறது ஆளுநர் உரை.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் சித்ரவதை: பணிப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை!

செய்தியாளர் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “ஒன்றே கால் நிமிடத்தில் முடிந்த ஆளுநர் உரை- புது டிரண்ட்!

  1. TN governor will finish it in one line as “deemed to have read the content placed on table” and attempt Guinness world record.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *