ஆதரவு இல்லாமல் தனி மரமாக இருப்பதால் விரக்தியில் ஓபிஎஸ் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தர்மயுத்தம் 2.0 என்பதே திமுகவின் பீ டீம்தான். யாரை எதிர்த்து ஜெயலலிதா நின்றாரோ அவர்களுடனே பன்னீர்செல்வம் கைகோர்த்து இருப்பது வெட்கக்கேடானது.
விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் ஓ.பி.எஸ். அதிமுக என்ற மிகப்பெரிய சக்தியின் முன் ஓபிஎஸ் போன்றவர்கள் எடுபட போவதில்லை.
பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவேன், கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பன்னீர்செல்வம் கூறுவதால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.
ஆதரவு இல்லாமல் தனி மரமாக இருக்கிறவர்கள்தான் இப்படி சரளமாக கருத்துகளை அள்ளிவிடுவார்கள். ஓபிஎஸ் வெறும் வாய்ஜால வீரர், அவரிடம் யாரும் இல்லை.
அதிமுக வாக்குகளை பிரித்து, திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யவே ஓபிஎஸ் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். யார் நினைத்தாலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.
அதிமுக யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவர் மகத்தான வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
ரிஷி சுனக்கிற்கு அபராதம் : இது முதன்முறையல்ல!