திமுக சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி பரமக்குடியில் இருக்கும் அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியமான ஆளுமையான இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி பரமக்குடியில் நடக்கும் நிகழ்வுகளில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களே இதுவரை பங்கேற்று வந்துள்ளனர்.
திமுகவின் தென் மாவட்ட முகங்களான சுப. தங்கவேலன், தங்கம் தென்னரசு போன்றவர்களே பங்கேற்று வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவின் தலைவரான மு.க.ஸ்டாலின் முதன் முறையாக பரமக்குடி சென்று இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவர் செல்லவில்லை.
இந்த பின்னணியில் தான் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் முதல்வரின் மகனுமான உதயநிதி இன்று பரமக்குடிக்கு வந்து சென்றிருக்கிறார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “விடுதலை போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மக்களை அணி திரட்டி போராடிய உரிமை போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமைச்சர் பெருமக்களுடன் மரியாதை செய்தோம். இம்மானுவேல் சேகரனாரின் புகழ் என்றென்றும் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியோடு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், இராஜகண்ணப்பன், பெரியகருப்பன், தங்கம்தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி முருகேசன், மானாமதுரை தமிழரசி, காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வுக்கு திமுகவின் சார்பில் அமைச்சர்கள் மட்டும் செல்வதாகவே திட்டம். இந்த நிலையில் திடீரென உதயநிதியை அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஓரிரு நாட்கள் முன்புதான் திருநெல்வேலி, மதுரை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில்தான் பரமக்குடி இமானுவேல் நினைவேந்தலுக்கு உதயநிதியை அனுப்பி வைத்துள்ளார். இது தென் மாவட்ட அரசியலில் திமுக மீதான பார்வை பற்றிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பேசினோம்.
“தென் மாவட்டங்களில் சமீப ஆண்டுகளாக அரசியல் ரீதியான முக்கியமான இரு நாட்கள் செப்டம்பர் 11, அக்டோபர் 30. செப்டம்பர் 11 இமானுவேல் நினைவு தினம், அக்டோபர் 30 தேவர் குரு பூஜை. இதில் தேவர் குருபூஜைக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
90 களில் திமுகவைச் சேர்ந்த அகமுடையார் சமுதாயத்துக் காரரான எம்பி. பவானி ராஜேந்திரன் தான் பரமக்குடிக்கு சென்று இமானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி செலுத்த ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்தே திமுகவினர் பரமக்குடிக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இமானுவேல் சேகரன் சமுதாயமான தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் வாக்கு வங்கியை குறிவைத்து ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் தனி அமைப்பு கண்டு தங்களுக்கென கணிசமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டனர்.
தென் மாவட்டத்தில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி பெரும்பாலும் அதிமுகவுக்கு சென்று வந்த நிலையில், தென் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் வங்கி அதே அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் அமமுக போட்டியிட்டதால் திமுக வெற்றி வாய்ப்பைப் பெற்றது.
குறிப்பாக திருவாடானை தொகுதியில் அமமுக 33 ஆயிரம் 426 வாக்குகள் வாங்கியது. காரைக்குடியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். மானாமதுரையில் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி பத்தாயிரம் ஓட்டுகள் பெற்றார்.
இவ்வாறு தேவர் வாக்கு வங்கியில் அமமுக பிளவை ஏற்படுத்தியதால்தான் திமுக தென் மாவட்டங்களில் கணிசமாக ஜெயித்ததே தவிர, தேவேந்திர குல வேளாளர்களின் வாக்கு வங்கி பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக இல்லை.
இதற்கிடையே பாஜகவும் தேவேந்திர குல வேளாளார் சமுதாய வாக்குகளை பெற குறி வைத்தது. இந்த சமுதாயத்தின் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை சூட்டியது மோடி தலைமையிலான மத்திய அரசு. நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர் என்று மோடி கூறிய வார்த்தைகள் இந்த சமுதாய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆனால் இதை தமிழக பாஜக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி போட்டியிட்ட இருபது இடங்களில் ஒன்றில் கூட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தவரை வேட்பாளராக நிறுத்தவில்லை.

இப்போது அதிமுக பலவீனமாகிக் கொண்டே வர, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கும் பழையபடி இல்லை. இந்த பின்னணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற திமுக விரும்புகிறது.

அதற்காகத்தான் முதல்வரின் மகனே இந்த இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதேநேரம் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று வரை திமுக பதில் சொல்லவில்லை.
அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்ற விவாதம் மேலெழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உதயநிதியை அனுப்பி விவாதத்தை திசை திருப்பிவிட்டது ஆளுங்கட்சி மேலிடம்” என்கிறார்கள்.
தேவேந்திர குல சமுதாயத்தைச் சேர்ந்தவரும் பேராசிரியருமான முனைவர் அழகுராஜா பழனிசாமியிடம் பேசினோம்.

“கலைஞரின் காலத்தில் எல்லாம் தென் மாவட்டங்களில் திமுக என்றால் தேவேந்திர குலம் என்றும் அதிமுக என்றால் முக்குலத்தோர் என்றும் ஒரு தோற்றம் இருந்தது. அதற்குப் பிறகான கால கட்டங்களில் பல மாறுதல் ஏற்பட்டன.
இப்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், முதல்வரின் மகனுமான உதயநிதியின் பரமக்குடி வருகை தேவேந்திர குல மக்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் இமானுவேல் சேகரன் நினைவேந்தலை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது தேவேந்திர மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு. அதை அறிவிக்க தாமதப்படுத்தக் கூடாது. பட்டியல் இன வெளியேற்றத்திலும் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது” என்கிறார்.
–வேந்தன்
பரமக்குடியில் ரயில் மேல் ஏறிய இளைஞர்: மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்!