ஆளுநர் உரை: குடியரசுத் தலைவரிடம் புகார்!

Published On:

| By Kalai

Governors Speech Complaint to the President

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தமிழக அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பத்திகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு படித்தார்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை அவர் சொல்லவில்லை.

இதைக் கண்டித்து சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் தேசியகீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார்.

இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் ஆளுநர் நடந்துகொண்டது தொடர்பாக தமிழக அரசு சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா., என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அளித்தனர்.

அந்த கடிதத்தில், ஆளுநர் மரபை மீறி நடந்து கொண்டதாகவும், அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கலை.ரா

த்திரிகையாளர் மறைவு: ஆளுநர் இரங்கல்!

“சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி” – உதயநிதி ஸ்டாலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share