ஜெயக்குமார் தனசிங் கொலை…போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்… வெளிவராத விசாரணைத் தகவல்கள்!

அரசியல் தமிழகம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் மரணமடைந்தது பற்றிய விசாரணையை நெல்லை மாவட்ட காவல்துறை தீவிரமாக்கி இருக்கிறது.

மே 2 ஆம் தேதி முதல் தனது தந்தையை காணவில்லை என ஜெயக்குமாரின் மகன் உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மே 4 ஆம் தேதி ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய நெல்லை போலீஸார் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர், நேற்று (மே 5) அவரது உடல் அவரது தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

Image

ஜெயக்குமாருக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை,

“இந்த விவகாரத்தில் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் விசாரணை நடக்கும் என்று எஸ்பி எங்களிடம் உறுதி தந்துள்ளார். விசாரணை நடத்தி யாராக இருந்தாலும், அது எங்கள் கட்சிக்காரராகவே இருந்தாலும், எந்த அரசியல் போர்வையில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்த விவகாரம் பற்றி காங்கிரஸ் கட்சியும் விசாரணை நடத்தி தேசிய தலைமையிடம் அறிக்கை அளிப்போம்” என்று கூறியுள்ளார்.

ஜெயக்குமார் தனசிங் வழக்கை எஸ்,பி தலைமையில்  ஒரு தனிப்பிரிவு விசாரணை செய்கிறது.  டிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்பிரிவு விசாரிக்கிறது. ஜெயக்குமாரின் செல்லுக்கு வந்து சென்ற போன் கால்களை கால்தம் போட்டு, தொழில்நுட்ப பிரிவு விசாரித்து வருகிறது. இப்படி பல டீம்கள் இவ்வழக்கை விசாரிக்கின்றன.

ஜெயக்குமார் தனசிங் நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு எழுதிய கடிதமும், தனது மருமகனுக்கு எழுதிய கடிதமும் பரபரப்பான நிலையில் விசாரணை எந்தத் திசையில் செல்கிறது என்பது பற்றி காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

“காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் ஜெயக்குமார் தனசிங் மரணம் என்பது கொலைதான் என்று உறுதியாகியிருக்கிறது.
அவரது உடல் கம்பிகளால் கட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்டால் இதேபோல் உடலை கம்பிகளால் இறுக்க கட்டியிருக்க முடியாது.

மேலும் பிரேதப் பரிசோதனையின்போது ஜெயக்குமார் தனசிங்கின் உடலுடைய கால் பாதப் பகுதி எரிந்திருப்பது தெரியவந்திருக்கிறது. தற்கொலை என்றால் பாதம் எரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் அவரது உடல் கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது சொந்தத் தோட்டத்திலேயே எரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது நுரையீரலை பரிசோதித்தபோது அதில் புகையோ, சாம்பல் துகள்களோ படிந்திருக்கவில்லை. ஆக அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தால் அவரது உடலும், ஓலைகளும் எரிந்தபோது ஏற்பட்ட புகையை அவர் கடைசியாய் சுவாசித்திருக்க வேண்டும். அப்படி சுவாசித்திருந்தால் அந்த புகை அவரது நுரையீரலில் படிந்திருக்கும். ஆனால் அப்படி எந்த புகைப் படிவும் நுரையீரலில் இல்லை. அப்படியானால் அவர் உயிரற்ற நிலையில்தான் எரிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவர் கொல்லப்பட்டிருப்பது தெளிவாகிறது” என்கிறார்கள்.

தற்கொலையா, கொலையா என்பதில் கொலை என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் யார் செய்திருக்கிறார்கள் என்பதில்தான் விசாரணை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இதுபற்றியும் விசாரணை டீம் வட்டாரத்தில் துருவினோம்.

“கொல்லப்பட்ட ஜெயக்குமார் தனசிங் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக மட்டுமே ஊடகங்கள் மூலம் அறியப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு இந்த அரசியல் முகம் மட்டுமல்ல.

அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், காண்ட்ராக்டரும் கூட. கடந்த ஒரு மாதமாகவே அவரது செல்போனுக்கு வந்த போன் அழைப்புகள், டவர் லொக்கேஷன்கள் ஆகியவற்றை வைத்து முதல்கட்டமாக ஆராய்ந்ததில் அவருக்கு அரசியல் ரீதியான மிரட்டல்கள் இல்லை என்றே தெரிகிறது.

வேறு என்ன மிரட்டல்?

ஜெயக்குமார் தனசிங் திருநெல்வேலியில் மட்டுமல்ல தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ளவர்களிடம் கோடிக் கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார். சுமார் 40 கோடி அளவில் கடன் வாங்கியிருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த கடனுக்கான அசலையோ, வட்டியையோ அவர் முறையாக செலுத்தவில்லை. இது தொடர்பாகவே இதே நெல்லை எஸ்..பி. அலுவலகத்தில் ஜெயக்குமார் தனசிங் மீது சிலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சியின் மாவட்ட தலைவர் என்ற அரசியல் அதிகாரத்தால் தன் மீதான புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத அளவுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார் தனசிங்.

ஜெயக்குமாருக்கு கடன் கொடுத்தவர்களில் சிலரே போலீஸுக்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள். மேலும் சிலர் தங்கள் கடனை வசூலிக்க வேறு மாதிரியான முறைகளை கையாண்டிருக்கிறார்கள். அதாவது கூலிப்படையை வைத்து ஜெயக்குமாரை மிரட்டியிருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் கொடுத்த கடன் தொகை மிக அதிகம். அதை போலீசில் புகாராகக் கொடுத்தால் அந்த தொகைக்கு கணக்கு காட்டியாக வேண்டும் என்பதால் அவர்கள் போலீஸ் மூலமாக வசூலிப்பதை விட கூலிப்படை மூலமாக வசூலிப்பதையே வசதி என கருதியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஜெயக்குமாரிடம் தொடர்புகொண்ட கூலிப்படையினரிடமும், கூட அதிகார தொனியில்தான் பேசியிருக்கிறார் ஜெயக்குமார்.

இந்த நிலையில் இந்த கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கூலிப்படை மூலமாகவே ஜெயக்குமார் தனசிங் கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

அதிலும் கொல்லப்பட்ட விதம், எரிக்கப்பட்ட விதம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இதில் ‘மதுரை கேங்’ கின் கை இருப்பதைப் போலத்தான் தோன்றுகிறது” என்கிறார்கள் விசாரணை வட்டாரத்தில்.

அடுத்தடுத்த கட்ட விசாரணைகளில் ஜெயக்குமாரை எந்த கூலிப்படை மூலமாக யார் கொலை செய்தார் என்பதில் இன்னும் சற்று தெளிவு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள் விசாரணை வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

+1
0
+1
0
+1
0
+1
10
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *