அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று (நவம்பர் 15 ) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதென்று வந்த புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். அப்போது 11 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. இதற்கான பணிகள் துவங்கி நடைபெற்றது. இதற்கிடையேதான் மருத்துவக்கல்லூரி கட்டுமானத்தில் ஊழல், முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
மிகப்பெரிய முறைகேடு
அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், உதகமண்டலம், உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகளை கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.
உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள்
1 லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டிடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவ கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும்தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை முதன்மை செயலாளர், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 2021 ஆண்டு ஜூலை 7 தேதி புகார் செய்தேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (நவம்பர் 15 ) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்போது நீதிபதி, தமிழ்நாடு காவல்துறையில் இந்த புகார் குறித்து விசாரிப்பதாக கூறும்போது, சி.பி.ஐ. விசாரணை ஏன் கேட்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது அப்போது, திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழக அமைச்சர்களுக்கு பாஜக செலவில் சுற்றுலா: அண்ணாமலை
கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!