ராஜன் குறை Gandhi’s Ramarajya and Hindutva Ramarajya
இந்த ஜனவரி 30ஆம் நாள் காந்தி கொல்லப்பட்டு எழுபத்தாறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்தியாவின் ஆகப்பெரிய அரசியல் படுகொலை அது. இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இயங்கியவரும், சாவர்க்கரின் சீடருமான விநாயக் நாதுராம் கோட்சே என்பவரால் முழுக்க முழுக்க அரசியல் சித்தாந்தம் காரணமாக செய்யப்பட்ட கொலை அது.
காந்தி ராமராஜ்யம் என்ற லட்சிய அரசமைப்பை பிரபலப்படுத்தியவர். இந்திய அரசாட்சி ராமராஜ்யம் போல நடக்க வேண்டும் என்றார். ஆனால், அவரை கொல்லுமளவு வன்மம் கொண்ட இந்துத்துவ சக்திகளும் ராமரைத்தான் தங்கள் அரசியலின் முக்கிய குறியீடாகக் கொண்டன. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த பூமி என்று சொல்லி, 1949ஆம் ஆண்டு அதற்குள் சிலைகளை இரவோடிவராக கொண்டு போய் வைத்தனர். இதில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் திக்விஜய்நாத் என்ற கோரக்பூர் மடாதிபதி, காந்தி இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு அவரை கொல்பவர்களுக்கு பரிசளிப்பதாக டெல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியவர். அதற்காக கைது செய்யப்பட்டவர்.
அன்று தொடங்கிய ராம ஜென்ம பூமி பிரச்சினையில், 1992ஆம் ஆண்டு அந்த மசூதியை கரசேவகர்கள் இடித்துத் தரை மட்டம் ஆக்கினார்கள். அதன் பின் நடந்த நீண்ட நாள் வழக்கின் இறுதியில் உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அதனடிப்படையில் அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்ட கோயிலைக் கட்டி திறந்து வைத்துள்ளார்கள். அந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராமராஜ்யம் தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இப்படி ராமரையும், ராமராஜ்யத்தையும் வைத்து காந்தீயம், இந்துத்துவம் என்ற எதிரும், புதிருமான தீவிரமாக முரண்பட்ட இரண்டு சிந்தனைகள் உருவானது எப்படி? தன்னையறியாமலேயே காந்தி இந்துத்துவத்தின் பிரசாரத்துக்கு வலு சேர்த்துவிட்டாரா? இந்த பின்னணியை எப்படிப் புரிந்துகொள்வது?
வெகுமக்களின் மொழி
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசக் கதைகளும் இந்திய மக்களிடையே வாய்மொழியாகப் பரவலானவை. பல ஊர்களிலும் தல புராணங்களில் இங்கே ராமர் வந்தார், அனுமார் வந்தார், பாண்டவர்கள் வந்தார்கள் என்று கதை சொல்வது வழக்கம். ஏதோவொரு பெரிய பாறை இருந்தால் அது பீமன் கொண்டுவந்து போட்டது, அனுமார் கொண்டுவந்து போட்டது என்று கூறிவிடுவார்கள்.
வால்மீகி எழுதிய வடிவிலோ, வியாசர் எழுதிய வடிவிலோ பெரும்பாலோருக்கு இந்த இதிகாசக் கதைகள் தெரியாது என்றாலும், ஏதொவொரு வடிவில் இந்தக் கதைகளை பலரும் கேட்டிருப்பார்கள். வட நாட்டில் துளசிதாசர் பதினாறாம் நூற்றாண்டில் எழுதிய ராமாயணம் பரவலாக அறியப்பட்டது. கபீர்தாஸ் போன்ற மகான்களும் ராமர் பெயரை பிரபலப்படுத்தியுள்ளார்கள். ஜைன மதம், புத்த மதம் ஏன் இஸ்மாயிலி முஸ்லிம்களும்கூட ராமாயண கதைகளை உருவாக்கி உள்ளார்கள்.
ராமர் கதையில் பொதுவாக அவரது சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முடிசூட்டப்படும் தருணத்தில் அரச பதவி அவரிடமிருந்து பறிக்கப்படுவதையும், வனவாசத்துக்குச் செல்வதையும் அவர் மனதார ஏற்றுக்கொள்வதுதான். மனைவியைப் பறிகொடுக்கிறார், மீட்கிறார். யாரையும் நொந்து கொள்வதில்லை. வனவாசம் முடிந்து அயோத்திக்கு மீண்டு அரசாட்சியை ஏற்றுக்கொள்கிறார். ஒரு லட்சிய புருஷராக வடிவமைக்கப்பட்டுள்ளார்.
காந்தி வெகுமக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தன்னுடைய அரசியலைப் பேச விரும்பினார். அதனால் தான் விரும்பும் லட்சிய அரசாட்சியை ராமராஜ்யம் என்று அழைத்தார். அதை அவர் இந்துக்களின் ஆட்சியாகவோ, இந்துக்களுக்கான ஆட்சியாகவோ சிந்திக்கவில்லை. அனைத்து எளிய மனிதர்களுக்கும் நீதி கிடைக்கும் அறம் சார்ந்த ஆட்சியையே அவர் ராமராஜ்யம் என்று அழைத்தார்.
அவரைப் பொறுத்தவரை ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்று கூறினார். இறைவனை எந்த பெயரில் அழைத்தாலும் ஒன்றுதான் என்றார். அவருடைய ஆசிரமத்து பஜனையில் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற வரிகளுடன் “ஈஷ்வர அல்லா தேரோ நாம்” என்ற வரியையும் சேர்த்துப் பாட வைத்தார்.
காந்தியைப் பொறுத்தவரை ராமாயணம், மகாபாரதம் ஆகியவை உருவகக் கதைகள். அதில் வரும் போர்கள், வன்முறை ஆகியவற்றை ஒருவரது உள்ளத்தினுள் இருக்கும் நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான போராகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். காந்தி எந்த லட்சியத்துக்காகவும் வன்முறையைக் கைகொள்ளக் கூடாது என்ற அகிம்சை மார்க்கத்தையே மனதார நம்பியவர். வன்முறைக்கு ஆதாரமாக உள்ள சுயநலம், பேராசை, இச்சைகள் ஆகிய அனைத்தையும் ஒருவர் களைய வேண்டும், மனத்தின்கண் மாசிலனாக வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
இந்துத்துவம் நேசித்த வரலாறும், வன்முறையும்
சாவர்க்கர் உள்ளிட்ட இந்துத்துவர்கள் அகிம்சை என்பது கோழைத்தனம் என்று கருதினார்கள். காந்தி இந்துக்களையும், இந்தியர்களையும் கோழைகளாக மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனிநபர் கொலைகளை ஆதரித்தார். கர்சன் வைலி என்ற பிரிட்டிஷ் அதிகாரியை லண்டனில் மதன்லால் திங்கரா என்ற இந்திய மாணவர் 1909ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றபோது அதை ஒரு தேசபக்த செயல் என்று கூறினார் சாவர்க்கர். காந்தியோ அதுபோன்ற கொலைகளை வன்மையாகக் கண்டித்தார்.
சாவர்க்கர் ராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்கள் எதிரிகளை போரிட்டுக் கொன்ற வீரபுருஷர்கள் என்றே கருதினார். நாட்டினை அடிமைப்படுத்தியுள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவது தவறில்லை என்று கருதினார். மதன் லால் திங்கரா செய்த கொலைக்குப் பிறகு காந்தியும், சாவர்க்கரும் லண்டனில் நிகழ்ந்த விழா ஒன்றில் முதலும் கடைசியுமாக சந்தித்தனர். அவர்களது மாறுபட்ட சிந்தனைகளை உரைகளாக நிகழ்த்தினர்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்துதான் காந்தி “இந்து சுவராஜ்யம்” என்ற நூலினை எழுதினார். அதில் ஆங்கிலேயர்கள் நாட்டை ஆள்வது பிரச்சினையில்லை. இந்தியர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதுதான் பிரச்சினை என்றார். உதாரணமாக கைத்தறி துணிகளை நெய்து உடுப்பதுதான் பல கோடி இந்தியர்களுக்கு சுலபமானது, அவர்களை மில்களில் இயந்திரங்கள் மூலம் தயாரான துணிகளை அணியும்படி செய்வது அவர்களது சுயேச்சையான பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது என்று காந்தி கருதினார்.
இந்துத்துவர்களுக்கு ஆட்சியை ஆங்கிலேயர்களிடமிருந்து பறிப்பது முக்கியமானதாக இருந்தது. இந்து நாளடைவில் இந்து அடையாளவாதமாக மாறி, இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக பரிணமித்தது. ஆங்கிலேய எதிர்ப்பைவிட, இஸ்லாமியர்கள் மீண்டும் அதிகாரமிக்கவர்களாக மாறக் கூடாது என்பது அவர்களுடைய அரசியலின் மையமாக மாறியது.
காந்தியோ கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்ததுடன், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தத் தொடங்கினார். வெகுமக்களை அரசியல் மையப்படுத்துவதிலும், காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் வேர்விடச் செய்வதிலும் பெரும் வெற்றி பெற்றார். காந்தியின் ஆசிரம வாழ்க்கை, மேலாடை களைந்தது, அவரது அகிம்சை, பக்தி நெறி ஆகியவை எல்லாம் சேர்ந்து அவரை புனிதராக, மகாத்மாவாக மக்களை கொண்டாட வைத்தது. அவர் தொடர்ந்து ராமரை ஒரு புனித உருவகமாகக் கூறி வந்தார். ராமர் உண்மையில் வாழ்ந்தாரா, இல்லையா என்பது காந்திக்கு முக்கியமானதல்ல. அவர் ஒரு காவிய பாத்திரம், லட்சிய உருவகம் என்பதே அவருக்கு முக்கியம்.
வரலாற்று ராமர் Gandhi’s Ramarajya and Hindutva Ramarajya
சாவர்க்கர், இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்த மன்னர் ராமர் என்று வரலாற்றில் வாழ்ந்த ஒரு மன்னராக ராமரைக் கூறினார். தனித்தனி சிறு நாடுகளாக இருந்த இந்தியாவை, குறிப்பாக தென்னாட்டை வெற்றிகொண்டு ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்தவர் ராமர். வீரம் நிறைந்த ஒரு பேரரசர்.
இந்த வரலாற்று ராமருக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது என்று வரலாற்றாசிரியர்கள் சொன்னால் இந்துத்துவர்களுக்கு கடும் கோபம் வரும். சமஸ்கிருத இலக்கியங்களிலும் சரி, நாட்டார் மரபுகளிலும் சரி ராமரைக் குறித்த பல்வேறு சித்திரிப்புகள் உள்ளன. அவற்றில் பலவற்றில், ஏராளமான இடர்பாடுகளை எதிர்கொண்ட ஒரு மனிதனாகத்தான் ராமர் கூறப்பட்டுள்ளார்.
காளிதாசர் பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்படும் ரகுவம்சம் என்ற காவியத்தில் ராமர் ரகுவம்ச மன்னர்களில் ஒருவராகக் கூறப்படுகிறார். அந்த வம்சத்துக்கே பெயரைக் கொடுத்த ரகு என்ற மன்னரே காளிதாசன் காவியத்தில் இந்தியா முழுவதும் திக்விஜயம் செய்து நாட்டை ஒருங்கிணைக்கிறார். தென்னாட்டுக்கும் ரகு படை நடத்தி வந்ததாக ரகுவம்சம் கூறுகிறது. இதற்கெல்லாமும் சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான ராமாயணக் கதைகளுக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. சீதை ராமனின் சகோதரி என்று கூறும் கதைகளும் உள்ளன.
வால்மீகி ராமாயணத்தை ஆராய்ந்த பலர் அதில் குறிப்பிடப்படும் நிலவியலின்படி, லங்கா என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஆற்றுத் தீவுதான் என்று கூறுவது உண்டு. அங்குள்ள ஆதிவாசி மக்களையே அரக்கர்களாக வால்மீகி சித்திரித்துள்ளார் என்று கருதுவார்கள்.
ஆனால் இதுபோன்ற பல்வேறு விவாதங்களை புறமொதுக்கி, ராமரை வரலாற்றில் வாழ்ந்த ஒரு அடையாளமாகக் கட்டமைப்பதையே இந்துத்துவர்கள் மேற்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் அவர் பிறந்தார் என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார்கள். அந்தப் பிரச்சாரத்தின் விளைவாக இப்போது ஒரு கோயிலையும் அந்த இடத்தில் எழுப்பியுள்ளார்கள்.
அவர்கள் கூறும் ராமராஜ்யம் என்பது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதை யூகிப்பது கடினமல்ல. அவர்கள் பழைய பேரரசு கால சிந்தனையில் ஊறியவர்கள். அதனால் இந்திய ஒன்றிய அரசை ஒற்றை அரசாகக் கட்டமைக்க இந்து அடையாள பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்கிறார்கள்.
எதிர்கால இந்தியாவில் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?
காந்தி வலியுறுத்திய லட்சியம் வலியோரும், எளியோரும் இணைந்து பொது நன்மையைக் கருத்தில்கொண்ட அரசமைப்பு. அனைவருக்கும் எளிதில் நீதி வழங்கப்படும் காருண்யமிக்க அமைப்பு, அதையே அவர் ராமராஜ்யம் என்றார். அதை அவர் மத அடையாளமாகக் கருதவில்லை.
ஆனால், இந்துத்துவ சக்திகள் அதை இந்தியாவை இந்து ராஷ்டிரமாக கட்டமைக்க பயன்படுத்துகின்றன. ராமர் கோயிலைத் திறந்த கையோடு காசி ஞானவாபி மசூதியை கையகப்படுத்த கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து மத அடையாள அரசியலை பேணுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு.
உண்மையில் காந்தியின் லட்சியங்களில் நாட்டம் கொண்டோர், அவரது மத நல்லிணக்கத்தில் மதிப்பு கொண்டோர், எப்படி இந்த இந்து அடையாள அரசியலை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே கேள்வி. அவர்கள் காந்தியின் சிந்தனைகளை உயிர்ப்பித்துப் பேசாவிட்டால், காந்தியின் ராமராஜ்யம், இந்துத்துவ ராமராஜ்யத்தில் கரைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்
டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க : அப்டேட் குமாரு
சர்தார் 2 பூஜை நிகழ்ச்சி தேதி இதுதானா?
பிகார் ஆட்சி மாற்றம் : நிதிஷ்குமார் – தேஜஸ்வி சொல்வதென்ன?
Gandhi’s Ramarajya and Hindutva Ramarajya