தனது புகாரை அடுத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பு.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “பெண்களை ஆபாசமாக பேசுகிற ஆண்களை அடிக்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. என்னுடைய திறமையை மட்டும் நம்பி வந்திருக்கிறேன்.

என்னை சீண்டி பார்க்க வேண்டாம். திமுக பேச்சாளர் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.
அவர் பேட்டியளித்த சில நிமிடங்களில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பு.
அவர் ”எனது புகாரை அடுத்து திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி.
கட்சியிலிருந்து நடவடிக்கை எடுத்தாலும், என்னை குறித்து அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலத்தில் இதேபோன்று தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
குஷ்புவை இழிவாக பேசிய திமுக பேச்சாளர்: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
Comments are closed.