சிறுத்தைகள் Vs பாமக: பதற்றத்தில் கடலூர்- மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்!
கடலூர் மாவட்டத்தில் கொடியேற்றுவது சம்பந்தமாக பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சாதிப் பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமாகியிருக்கிறது.
கடலூர் விருத்தாசலம் சாலையில் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதி சுப்பிரமணியபுரம். இங்கே கடந்த ஒன்றரை மாத காலமாக போலீஸார் ஷிப்ட் முறையில் டூட்டி பார்த்து வருகிறார்கள்.
போலீஸார் இல்லாத நாளே கடந்த ஒன்றரை மாதங்களாக இல்லை என்ற அளவுக்கு இந்த பகுதி டென்ஷனில் இருக்கிறது.
என்னதான் பிரச்சனை? பாமக மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன் நம்மிடம் கூறினார்.
“கடலூர் டூ விருத்தாசலம் சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் ஒன்றரை மாதம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்ற முயன்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை போலீஸுக்கு போனது. வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தாசில்தார் தலைமையில் பீஸ் கமிட்டி போட்டார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு ஏற்படவில்லை. அதன் பிறகு ஆர்டிஒ தலைமையில் பீஸ் கமிட்டி அமைத்து, ‘இந்த பகுதியில் தற்போதைக்கு யாரும் கொடியேற்றக்கூடாது’ என்று முடிவு செய்தனர்.
அப்போது சிறுத்தைகள், ‘அவங்க வேணும்னா அவங்க கொடிய ஏத்திக்கட்டும். எங்க கொடியை ஏத்தக் கூடாதுனு ஏன் சொல்றீங்க?’ என்று கேட்டனர். இந்த நிலையில் வன்னியர்கள் அதிகளவில் வாழக்கூடிய பகுதியில் ஹெச் டி லைன் போகும் இடத்தில் ஒரு நாள் இரவு திடீரென்று சிறுத்தைகள் தங்கள் கொடியை ஏற்றினார்கள்.
அதனால் பாமகவினர் மற்றும் பொதுமக்கள் மறியல் செய்தோம், போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். இதுவரையில் நடவடிக்கை இல்லை. சரியென்று நாங்கள் டிசம்பர் 2ஆம் தேதி காலை 10.00 மணியளவில் விசிக கொடிக் கம்பத்திலிருந்து 60 அடி தூரத்தில் பாமக கொடியேற்ற அடிக்கல் நாட்டினோம். அதை போலீசும் சிறுத்தைகளும் தடுக்கிறார்கள்.
இந்த பிரச்சினைகள் வளர காரணம் கடலூர் மாவட்ட கலெக்டரும் எஸ்பியும்தான். இவர்கள் ஊழல் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர மக்கள் பிரச்சினைகள் பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ கவலைப்படவில்லை. அந்த அதிகாரிகள் கொள்ளையடிக்கும் விபரங்கள் ஆடியோ, வங்கி கணக்குக்கு பணம் போடச்சொன்னது அனைத்து ஆதாரமும் உள்ளது.
அதை எங்கள் தலைவர் வெளியிடுவார். இவர்கள் நேர்மையான அதிகாரிகளாக இருந்தால் தைரியமாக முடிவு எடுப்பார்கள். நேர்மையற்ற அதிகாரிகள் என்பதால் தடுமாறுகிறார்கள். விசிக கொடியேற்ற பாதுகாப்பு கொடுத்த போலீஸார், பாமக கொடியேற்றத் தடுப்பது ஏன்? இத்தனைக்கும் அந்த இடம் பாமக கொடி ஏற்கனவே இருந்த இடம்தான்” என்றார் காட்டமாக.
விசிக பிரமுகரும் கடலூர் மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வனிடம் இதுகுறித்து பேசினோம்.
“25 ஆண்டுகளுக்கு முன்பே அதே இடத்தில் விசிக கொடி இருந்தது. நான்தான் ஏற்றிவைத்தேன். சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மெஜாரிட்டியான மக்கள் தலித்துகள்தான்.
மெயின் ரோடு பகுதியிலும் தலித்துகள் அதிகமாக வாழ்கிறார்கள். அந்தப்பகுதியில் விசிக கொடியை ஏற்ற மறுக்கிறார்கள், அவர்கள் கொடியை ஏற்றத் துடிக்கிறார்கள்.
60 அடிக்குக் கம்பம் ஸ்ட்ராங்காக அமைத்துவிட்டோம். பீஸ் கமிட்டி நடந்ததால் அமைதி காத்தோம். மக்கள் போராட்டம் செய்ததால் எஸ்.பி சக்திகணேசன் நவம்பர் 26ஆம் தேதி கொடியேற்ற அனுமதி கொடுத்துவிட்டார்.
நான் தலைவர் திருமாவளவனை வரவழைத்து கொடியேற்ற முடிவு செய்தேன். ஆனால் மக்கள் உடனே கொடியை ஏற்றுங்கள் இல்லை என்றால் பாஜக கொடியை ஏற்றுவோம் என்று மிரட்டினார்கள்.
28ஆம் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தலைவர் திருமா வீடியோ காலில் பேசி அமைதிப்படுத்தினார். வேறு வழியில்லாமல் நவம்பர் 28ஆம் தேதி இரவு அதாவது 29ஆம் தேதி 12.45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் கொடியேற்றிவிட்டோம்.
அப்போது பாமகவினர் சாலை மறியல் செய்து கொடிக் கம்பத்தை அகற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்தார்கள். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் எங்கள் கொடிக் கம்பம் அருகில் பாமக கொடியேற்ற அடிக்கல் நாட்டியுள்ளனர். போலீஸும் தடுக்காமல் அமைதியாக இருந்துள்ளது” என்றார்.
இதற்கிடையே பாமக கௌரவ தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி, எம்.எல்.ஏ,கள் வெங்கடேசன், சதாசிவம், அருள், சிவக்குமார் ஆகியோருடன் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து சுப்பிரமணியபுரம் பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறார்.
அப்போது அந்த பகுதியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கொடியை அகற்றிவிடுகிறோம் என்று அதிகாரிகள் உறுதியளித்ததாக பாமகவினர் கூறுகிறார்கள்.
மேலும் சுப்பிரமணியபுரம் பகுதி வன்னியர் மக்களிடமும் பாமகவினரிடமும் பேசிய ஜிகே மணி, ‘பிரச்சனைகள் வேண்டாம். அமைதியாக போங்க. போராட்டம் ஏதும் வேண்டாம். வழக்கு, கோர்ட் என்று போவது சின்ன ஐயா விரும்பவில்லை ”என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
நிலவரத்தை கவனித்து வரும் வருவாய் துறை ஊழியர்கள் நம்மிடம், “இந்த பிரச்சினையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் உறுதியான முடிவெடுக்காமல் இருப்பதுதான் பிரச்சினை தொடர காரணம். இந்தத் தரப்பு போராட்டம் செய்தால் அவர்களிடம் போராட்டம் வேண்டாம் என்று கெஞ்சுவதும், அந்தத் தரப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் இறங்கிப் போய் கெஞ்சிக் கூத்தாடி போராட்டம் வேண்டாம் என்று பேசுவதும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் திறமையற்ற தனத்தையே இது காட்டுகிறது” என்கிறார்கள் கவலையோடு.
32 வருடங்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற சாதிக் கலவரங்களை அறிந்தவர்களுக்கு அதை நினைத்தாலே நெஞ்சம் பதறும். அப்படிப்பட்ட கலவரங்களை தற்போது டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபுவும், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் தீவிரமான முயற்சியால் அமைதிப்படுத்தி அடக்கிவிட்டுப் போனார்கள்.
அவர்கள் போட்ட அடிப்படைதான் இப்போது வரையில் அமைதியை கடலூரில் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைய அதிகாரிகள் அந்த அளவு செயல்படவில்லை என்று அரசு ஊழியர்களே கருதுகிறார்கள்.
நெடுஞ்சாலை புறம்போக்கு இடத்தில் விசிக மற்றும் பாமக கொடிக்கம்பம் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால், இரு தரப்பினர் மத்தியிலும் தணியாமல் இருந்துவரும் பகை எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே இப்போதைய நிலவரம்.
–வணங்காமுடி
பாலா- சூர்யா: நந்தா முதல் வணங்கான் வரை, நடந்தது என்ன?
வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!