அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத் துறையின் அதிரடி மூவ்… அதிர்ச்சியில் அமைச்சர்கள்!

அரசியல்

தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்… தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன்னொரு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை மிக தீவிரமான ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை இன்று (ஜூன் 21) தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே இவ்வழக்கில் அமலாக்கத்துறை தன்னையும் சேர்த்துக் கொள்ள போட்டுள்ள மனுதான் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, அதன் அடிப்படையில் அவர் மீது தொடரப்பட்ட அமலாக்கத்துறை  சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு ஆகியவை பற்றி ஒரு சின்ன ரீவைண்ட்.

தற்போதைய மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், 2001-06 அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.  2006-11 திமுக ஆட்சியில் இவர் மீது அப்போதைய திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட இந்த வழக்கு நடந்து வருகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன், அமைச்சரின் மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கை ரத்து செய்யுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். உயர் நீதிமன்றம் இதை 2017 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. கீழ் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம். விசாரித்து ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அமலாக்கத்துறை வழக்கு

இந்த நிலையில்தான்… பாஜக தலைமையிலான மத்திய அரசின் அமலாக்கத்துறை சொத்துக் குவிப்பு வழக்கை அடிப்படையாக வைத்து 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன்  மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் அனிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மிக மெதுவாக நடந்துகொண்டிருந்த நிலையில், மத்திய அரசின் அமலாக்கத் துறை வழக்கோ வேகவேகமாக நடந்தது.

இதன் முக்கிய திருப்பமாக 2-2-2022 அன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் வழிகாட்டு மதிப்பு மிக்க (சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகம்) சொத்துகளை முடக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை மேலும் வேகமெடுத்தது.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து 2017 இல் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக 5 வருடங்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த  2022 ஆகஸ்டு 4 ஆம் தேதி மேல் முறையீடு செய்தார் அனிதா. இந்த மேல் முறையீட்டு மனு உரிய விவரங்களைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லப்பட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Enforcement Department action Anita Radhakrishnan case

இந்த மனு மீதான விசாரணையில்தான் நவம்பர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கடுமையான கண்டனக் கருத்துகளை வெளியிட்டார். ‘என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஆட்சி மாறினால் நீதிமன்றமும் அரசு இயந்திரங்களும் மாறிவிட வேண்டுமா? ஆட்சி மாறுவதற்கும் இதுபோன்ற விசாரணைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் கட்சி உறுப்பினர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்கலாம். ஆனால் நீதிமன்றமும், அரசு இயந்திரமும் அப்படி அல்ல” என்றார் நீதிபதி.

இதற்கு மேல் இந்த வழக்கை விசாரிக்க வேறு எதுவும் இல்லை என்று கொந்தளித்து விட்டார்கள் நீதிபதிகள். அவர்கள் இதையே உத்தரவாக பிறப்பிக்கத் தயாராகிவிட்டார்கள்  என்பதை உணர்ந்து,  அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் அந்த மனுவையே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். 

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டிலும் சொத்துக் குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு ஆகியவற்றில் கிட்டத்தட்ட அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.

Enforcement Department action Anita Radhakrishnan case

இந்தியாவிலேயே முதன் முறையாக அமலாக்கத்துறையின் திடீர் மூவ்!

அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்… தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கிலும் அமலாக்கத்துறை நுழைந்துள்ளது.

அதாவது இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது அனிதா தரப்பினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 “சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசில் அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் இவ்வழக்கை நடத்த வேண்டிய  மாநில அரசு இவரது நலன்களை காக்க அக்கறை கொண்டுள்ளது.  இதன் மூலம் இவ்வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்ற சந்தேக நிழல் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடக் கூடாது.  எனவே இந்த வழக்கில் ப்ராசிகியூஷனில் மத்திய அரசின் ஏஜென்சி தலையிட்டு வழக்கை  பாரபட்சமின்றி நடத்த உதவுவது அவசியமாகிறது. இது பொது நலத்தின் பாற்பட்டது.  வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற  சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இன்னொரு தரப்பும் வழக்கில் சேர்ந்துகொள்ள அனுமதித்து தீர்ப்பளித்துள்ளன.

எனவே நீதிமன்றம் சட்டப் பிரிவு 301 (2) மற்றும் 302 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில்  அமலாக்கத் துறையை  வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக  (assist the prosecution) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இந்த வழக்கில் மாநில அரசின் வழக்கறிஞருக்கு உதவுவதற்காக எழுத்துபூர்வமான ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறையை அனுமதிக்க வேண்டும்” என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் சென்னை மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரங்களில்.

Enforcement Department action Anita Radhakrishnan case

இந்த மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு உதவ அதாவது assist the prosecution அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டால்…  இதையே முன் மாதிரியாக வைத்து  திமுக அமைச்சர்களுக்கு எதிரான எல்லா வழக்கிலும் அமலாக்கத்துறை உள்ளே வந்துவிடும். 

இன்று தூத்துக்குடி நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்பது அனிதா வழக்கிற்கு மட்டுமல்ல… இதுபோன்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் மற்ற திமுக அமைச்சர்கள் விவகாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை 9 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்துதான் ஊழல் ஒழிப்புக்கு எதிரான நடைப் பயணத்தை துவங்குகிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதிதான் திருச்செந்தூர் என்பது குறிப்பிடத் தக்கது.

வேந்தன்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்புக் கடன் திட்டம்!

+1
1
+1
2
+1
0
+1
4
+1
2
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *