மீண்டும் சூர்யா – ஜோதிகா காம்போவா?

Published On:

| By indhu

"No intention of joining politics" - Jyothika

சூர்யாவுடன் மீண்டும் நடிப்பதற்கு ஏற்ப கதை அமைந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என நடிகை ஜோதிகா இன்று (மே 3) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல், விக்ரம், சிம்பு என பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் ஜோதிகா.

பார்வை மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் போலாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள படம் “ஸ்ரீகாந்த்”. இந்த படத்தின் கதாநாயகனாக ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். இத்திரைப்படம் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று (மே 3) நடைபெற்றது. இதில் நடிகை ஜோதிகா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிகா, “நான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பேன். சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூர்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில தனிப்பட்ட காரணங்களால் சொந்த ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுமாதிரியான நேரங்களில் நாம் இந்த காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக உள்ளது” என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜோதிகா, “என்னிடம் இதுவரை யாரும் அரசியலுக்கு வாருங்கள் என்று கேட்கவில்லை. தற்போது அந்த திட்டமும் என்னிடம் இல்லை. எனது இரு குழந்தைகளும் படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. நான் அவர்களையும், வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகம் பேசியுள்ளேன். பெண்கள் சற்று சுயநலமாக இருக்க வேண்டும். உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு நீங்கள்தான் குடும்பத்தின் முதுகெலும்பு. ஆனாலும், உங்களுக்காக நீங்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஆரோக்கியமாக இருக்க நான் நிறைய செய்துள்ளேன்.

நான் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த பின்னர் அதிக புதுமுக இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர்கள் புதியதாக சிந்திக்கிறார்கள். சூர்யாவுடன் மீண்டும் நடிப்பதற்கு ஏற்ப கதை அமைந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். அதுபோன்ற கதைக்காக 10 ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓடி ஒளிய வேண்டாம்… : அமேதியில் ராகுல் போட்டியிடாததை கிண்டல் செய்த மோடி

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பாதிப்பு: ஆட்சியர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share