மேற்கு வங்கம்: களத்தை மாற்றிய இடதுசாரிகள்…மம்தாவிற்கு கிடைத்த நம்பிக்கை…பாஜக இந்த முறை வெல்ல முடியுமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். 42 நாடாளுமன்றத் தொகுதிகள் அங்கு இருக்கின்றன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் அனல் பறக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக 34 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத ஆட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்படிப்பட்ட மேற்கு வங்கத்தில், 2011 இல் ஆட்சியை திரிணாமுல் காங்கிரசிடம் பறிகொடுத்தனர் இடதுசாரிகள். அதன்பிறகு தொடர்ச்சியாக மோசமான பின்னடைவை இடதுசாரிகள் சந்தித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற விவாதத்தில் இடதுசாரிகளின் பெயரே இல்லாமல் போய்விட்டது.

அசுர வளர்ச்சி பெற்ற பாஜக

ஆனால் அதேசமயம் மேற்கு வங்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய சக்தியாக இல்லாமல் இருந்த பாஜக, கம்யூனிஸ்ட்களின் பின்னடைவிற்குப் பிறகு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 17% சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40.7% சதவீதமாக உயர்ந்தது, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்று பிரதான எதிர்கட்சியாக பாஜக உருவெடுத்தது. இது எப்படி நடந்தது, இந்த தேர்தலில் பாஜக என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் அனைவரின் முன்பும் உள்ள கேள்வியாக இருக்கிறது.

மம்தாவிற்கு பக்க பலமாக முஸ்லீம்களின் வாக்குகள்

இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் மேற்கு வங்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தின் மக்கள் தொகையில் இஸ்லாமியர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி மக்களின் மக்கள் தொகை மிகப் பெரியது. இஸ்லாமியர்கள் 27% சதவீதமும், பட்டியலினத்தவர் 23.5% சதவீதமும், பழங்குடியினர் 5.8% சதவீதமும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இவர்களின் வாக்குகள் எப்படி பிரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

மேற்குவங்கத்தில் 2011க்கு முன்புவரை முஸ்லீம்களின் வாக்குகளைப் பெருமளவில் இடதுசாரிகளே பெற்று வந்தனர். ஆனால் 2011-க்குப் பிறகு இது மாறிவிட்டது. முஸ்லீம்களின் வாக்குகள் மம்தா பக்கம் வந்துவிட்டது.

மேற்கு வங்கத்தில் CSDS-Lokniti நடத்திய ஆய்வின் முடிவு என்ன சொல்கிறதென்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில் 75% சதவீத முஸ்லீம்களின் வாக்குகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே பெற்றிருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் பாஜகவை வீழ்த்துவதற்கு மம்தாவிற்கு முஸ்லீம்களின் வாக்குகளே உதவியதாக இந்த ஆய்வு சொல்கிறது.

பட்டியலினத்தவர் வாக்குகளை கைப்பற்றிய பாஜக

மிக முக்கியமாக பட்டியலினத்தவர்களின் வாக்குகளை பாஜக பெருமளவு கைப்பற்றியிருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு சொல்கிறது. பட்டியலினத்தவர்களின் வாக்குகள் இல்லாமல் பாஜகவினால் 2019 இல் 18 எம்.பி தொகுதிகளை வென்றிருக்க முடியாது என்பதே மேற்கு வங்க அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

பட்டியலினத்தவர்களில் ராஜ்பன்சி மற்றும் நாமசூத்திரர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜ்பன்சிகளின் வாக்குகளில் வெறும் 9% வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் 75% சதவீத வாக்குகளைப் பெற்றது. அதேபோல் நாமசூத்திரர்களின் வாக்குகளில் 2016 இல் வெறும் 10% வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 54% வாக்குகளைப் பெற்றது. அதேபோல் மற்ற பட்டியல் சமூகத்தினரின் வாக்குகளையும் பாதிக்கு மேல் பெற்றுள்ளது பாஜக. அதேபோல் ஓ.பி.சி மக்களின் வாக்குகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்று கொண்டிருந்த வாக்குகள் பெருமளவிற்கு பாஜகவிற்கானதாக மாறியுள்ளது.

நாமசூத்திரர்களில் பலர் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிற்குள் குடியேறிய இந்துக்கள் ஆவர். அதேபோல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானபோதும் ஏராளமானோர் மேற்கு வங்கத்தில் குடியேறினர்.

CAA சட்டத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து குடியேறிய இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அங்கீகரிக்கப்படும் என்று நாமசூத்திரர்கள் மத்தியில் பாஜக தொடர் பிரச்சாரம் செய்து வருவது அவர்களின் ஆதரவை பாஜகவிற்கு பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், வங்கதேசத்தின் இசுலாமிய பெரும்பான்மைவாதத்தினால் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை மையப்படுத்திய பிரச்சாரங்களை பாஜக மேற்கொண்டு அவர்களை இந்துத்துவ கேம்புக்குள் சேர்த்து வருகிறது.

மேற்குவங்கத்தின் பழங்குடியினர் மத்தியில் அவர்களின் பகுதிகளில் வளர்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்ற கோபம் மம்தா ஆட்சியின் மீது அவர்களுக்கு இருக்கிறது. இதனை வைத்து பாஜக அவர்களை தன்வசமாக்கி வருகிறது.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை சாதி ரீதியான கணக்குகளைக் காட்டிலும் மத ரீதியான கணக்குகள் தேர்தலில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.

பாஜகவிற்கு மாறிய இடதுசாரிகளின் வாக்குவங்கி

2019 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக திரிணாமுல் காங்கிரசை எதிர்த்தே பிரச்சாரங்களை மேற்கொண்டது. போகிற போக்கில் மட்டும் இடதுசாரிகளை விமர்சித்தது. பாஜகவினர் தங்கள் பிரச்சாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் அளவிற்கு இடதுசாரிகள் மோசமானவர்கள் அல்ல என்றும் பேசினர்.

அதேபோல் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரசை தாக்கியே பிரதானமாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்பதே தங்கள் முதல் இலக்காகக் கருதியதால், இதுவரையில் அவர்களின் வாக்குவங்கியாக இருந்த வாக்குகள் பெருமளவு பாஜகவிற்கு மாறியது. இதன் காரணமாக பாஜகவின் வாக்குவங்கி சரசரவென உயர்ந்தது. அதேசமயம் இடது சாரிகளின் வாக்கு வங்கி ஒற்றை இலக்க சதவீதத்திற்குள் சுருங்கியதுடன், எம்.பி-கள் கணக்கு 0 ஆக மாறியது.

அடுத்ததாக நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பட்டியலினத்தவர்கள் மற்றும் ஓ.பி.சி மக்களிடையே தனி கவனம் செலுத்தி அவர்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை 48% சதவீதமாக உயர்த்தியதுடன் அறுதிப் பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தை மீண்டும் கைப்பற்றியது.

உள்ளாட்சித் தேர்தலில் முன்னேற்றம் கண்ட இடது சாரிகள்; பின்னடைவை சந்தித்த பாஜக

அதற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் வாக்கு வங்கி சற்று முன்னேற்றம் கண்டிருக்கிறது. அவர்கள் பாஜகவிடம் இழந்த தங்களது வாக்கு வங்கியின் ஒரு பகுதியை மீட்டெடுத்துள்ளனர்.

2021 இல் வெறும் 5.7% சதவீதமாக இருந்த இடதுசாரிகளின் வாக்கு வங்கி, 2023 உள்ளாட்சித் தேர்தலில் 14% சதவீதமாக அதிகரித்தது. அதேசமயம் பாஜகவின் வாக்குவங்கி உள்ளாட்சித் தேர்தலில் 23% சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

அணுகுமுறையை மாற்றிய இடதுசாரிகள்

2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போல் அல்லாமல், இந்த தேர்தலில் இடதுசாரிகளின் அணுகுமுறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சிபிஎம் கட்சி திரிணாமுல் காங்கிரசுக்கு சற்றும் குறையாமல் பாஜகவையும் எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது. சிபிஎம்-மின் பல கூட்டங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள், ”திரிணாமுல் காங்கிரஸ் மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை அடிக்கிறது…பாஜக நாட்டின் கஜானாவையே கொள்ளையடிக்கிறது” என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

பாஜகவிற்கான பூஸ்டர் காரணிகள் பெரிதாக இல்லை

2019 நாடாளுமன்றத் தேர்தலில் புல்வாமா விவகாரம் பாஜகவிற்கு பெரிய பூஸ்ட்டை மேற்கு வங்கத்தில் கொடுத்தது. இந்த முறை அப்படி பெரிய பூஸ்டர் கொடுக்கும் காரணி எதுவும் பாஜகவிற்கு அமையவில்லை. அதனால் தேசியவாத பிரச்சாரம் என்பது இந்தமுறை மேற்குவங்கத்தில் பெரிய விவாதமாக இல்லை.

அதனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக கையிலெடுத்திருக்கிறது. மம்தாவின் ஆட்சி மீது எழுப்பப்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த முறை மக்களிடையே விவாதமாக மாறியிருக்கிறது. மம்தா ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட 25,000 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களை ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி கொல்கத்தா உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டிருப்பதும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

மாநில அடையாளத்தை முன்வைக்கும் மம்தா

இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த முறை மாநில உரிமை, மாநில அடையாளம் என்று தேசிய இன அடையாளம் மற்றும் டெல்லி எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறது. வெளியார் எதிர்ப்பு என்ற பெயரில் பாஜகவை மேற்கு வங்கத்தில் எதிர்கொள்கிறது திரிணாமுல் காங்கிரஸ். 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த ஃபார்முலா பெரிய அளவில் மம்தாவிற்கு கை கொடுத்ததால் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதையே பிரதானமாக முன்வைத்து களமிறங்கியிருக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசிய அளவிலான பல தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு சென்று தொடர் பரப்புரைகளை மேற்கொண்டனர். ஆனால், இந்த முறை அவர்களில் பெரிதாக யாரையும் மேற்கு வங்க பிரச்சாரக் களத்தில் பார்க்க முடியவில்லை. வெளியிலிருக்கும் சக்திகள் மேற்கு வங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன எனும் பிரச்சாரம் வெகுவாக மேற்குவங்கத்தில் எடுபடுவதால், அப்படி ஒரு இமேஜ் தங்களின் மீது விழுந்து விடக் கூடாது என்பதற்காகவே பாஜக தேசிய அளவிலான பிரச்சாரகர்கள் பெரிதாக இந்த முறை களத்தில் இறக்கவில்லை.

மேற்குவங்கத்தில் மாற்றிப் பேசிய மோடி

அதேபோல் பல மாநிலங்களில் பாஜக செய்வதைப் போல மத ரீதியான polarisation உருவாக்கும் பிரச்சாரத்தினை மேற்கு வங்கத்தில் இந்த முறை செய்ய விரும்பவில்லை. பிரதமர் மோடி பல மாநிலங்களில் முஸ்லீம்களைக் குறித்து பேசுவதைப் போல மேற்கு வங்கத்தில் பேசவில்லை.

இந்து polarisation என்பது தொண்டர்கள் அளவிலும், வாட்சப் பிரச்சாரங்களிலும், உள்ளூர் கூட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், மாநில அளவிலான பிரச்சாரங்களில் அந்த திட்டம் பயன்படுத்தப்படவில்லை. இந்துக்களின் பிரச்சினைகள் என்று பெரிய பேரணிகளில் பேசும்போது, முஸ்லீம்களின் வாக்குகள் பெரிய அளவில் மம்தா பக்கம் polarise ஆகி விடும் என்பதால் அதைத் தடுப்பதற்காகவே இந்த ப்ளானை வைத்துள்ளது பாஜக. ஏனென்றால் 2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக தோற்பதற்கு காரணமாக இருந்தது முஸ்லீம்களின் வாக்குகள் பிரியாமல் மம்தாவிற்கு விழுந்தது தான்.

உள்ளூர் விவகாரங்களுக்கே முக்கியத்துவம்

அதேபோல் மேற்கு வங்கம் முழுவதும் அனைத்து கட்சிகளாலும் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில் தேசிய அளவிலான பிரச்சினைகளைக் காட்டிலும், உள்ளூர் விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசும், இடதுசாரிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 21%. அதேசமயம் பாஜகவின் வாக்கு சதவீதம் 23% சதவீதமாகக் குறைந்தது. உள்ளாட்சித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலிலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து மம்தாவிற்கு எதிரான வாக்குகளை கணிசமாக பிரிக்கும் பட்சத்தில் பாஜகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் குறையும். உள்ளாட்சித் தேர்தலைப் போன்றே நாடாளுமன்றத் தேர்தலை மக்கள் எதிர்கொள்வார்களா என்று சொல்ல முடியாது என்றாலும், மேற்கு வங்கத்தின் தேர்தல் பிரச்சாரங்கள் உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்தே நடைபெறுகிறது என்பது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

பாஜக பல மாநிலங்களில் செய்வதைப் போல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய தலைகளை பாஜகவில் இணைத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷ் பாஜக வேட்பாளருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் மம்தா பானர்ஜி. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இப்படி பலர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைக்கப்பட்டனர்.

இது பாஜகவிற்கு பெருமளவில் கைகொடுத்தது. இரண்டு கட்டத் தேர்தல் முடிந்து மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும் அதே திட்டத்தினை மீண்டும் செயல்படுத்தி வருகிறது பாஜக. மேற்கு வங்கத்தில் பாஜகவின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தவர்தான். இப்படி பாஜக பலம் பெறுவதற்கு பல தலைவர்களை திரிணாமுல் காங்கிரசிலிருந்து கட்சியில் இணைத்ததும் காரணம்.

கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே 42 தொகுதிகளிலும் neck to neck போட்டி இருக்கும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்கிறது. பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் எதிர் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பெரும் சவாலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு பறந்தது எப்படி? வெளியுறவுத்துறை புது விளக்கம்!

இட ஒதுக்கீடு… மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது: ராகுல்

வெயிலை விட மோடியின் கொள்கைதான் மக்களை சுட்டெரிக்கிறது! – கார்கே

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *