தமிழக அமைச்சர்களில் ஓரிருவரையாவது குறைந்தபட்சம் ஒருவரையாவது ஊழல் வழக்கில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சிறையில் தள்ளிவிட வேண்டும் என்று பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக.
அதற்கு ஏற்ற வகையில் சொத்துக் குவிப்பு வழக்கிலும், அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கிலும் சிக்கியுள்ள தற்போதைய கால் நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிட்டத்தட்ட சட்டத்தின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு முன் ஜாமீன் போடுவது ஒன்றே வழி என்ற சிக்கலான நிலையில் இருக்கிறார் என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
அனிதா, குடும்பத்தினர் மீதான வழக்கு என்ன?
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2006-11 திமுக ஆட்சியில் இவர் மீது அப்போதைய திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட இந்த வழக்கு நடந்து வந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன், அமைச்சரின் மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடுத்தது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தன் மீது தொடுத்த வழக்கை ரத்து செய்யுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.க்கு எதிராக அனிதா தொடுத்த இந்த வழக்கை உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
‘ நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்ததில் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. கீழ் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம். விசாரித்து ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.
அதிமுக-திமுக: அனிதாவின் அரசியல் விளையாட்டு
இதற்கிடையே 2015 ஆம் ஆண்டு அப்போதைய தூத்துக்குடி திமுக மாசெ பெரியசாமிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மோதல் அதிகமானது. இதனால் மீண்டும் அதிமுகவில் சேர அனிதா தயாரானார். ஆனால் அனிதாவை மீண்டும் கட்சியில் இணைக்க ஜெயலலிதா சம்மதிக்கவில்லை.
திமுகவும் அனிதாவின் கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அவரை சஸ்பெண்ட் செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில், இரு கழகங்களில் ஒன்றைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் 2015 நவம்பரில் அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து மீண்டும் திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து கலைஞரை சந்தித்து மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
அதிரடியாக நுழைந்த அமலாக்கத்துறை
இந்த நிலையில்தான்… பாஜக தலைமையிலான மத்திய அரசின் அமலாக்கத்துறை சொத்துக் குவிப்பு வழக்கை அடிப்படையாக வைத்து 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் அனிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மிக மெதுவாக நடந்துகொண்டிருந்த நிலையில், அதேநேரம் மத்திய அரசின் அமலாக்கத் துறை வழக்கோ வேகவேகமாக நடந்தது.
இதன் முக்கிய திருப்பமாக 2-2-2022 அன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் வழிகாட்டு மதிப்பு மிக்க (சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகம்) சொத்துகளை முடக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் அமலாக்கத்துறையின் நடவடிக்கை மேலும் வேகமெடுத்தது.

அமலாக்கத்துறை விசாரணை தடையும் நீக்கமும்
இந்த நிலையில் தன் மீது அமலாக்கத்துறை தொடுத்த பண மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா, ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு 29-6-22 அன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர் நீதிபதிகள். இந்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
அமலாக்கத்துறையின் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், “ அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது, அதே நேரம் அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய வேண்டுமென்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்” என்று கூறினார்கள். ஆனால் ஆர்டர் காப்பியில், ‘கைது செய்யவேண்டுமென்றால் நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும்’ என்ற பகுதிகள் இடம்பெறவில்லை.
இதனால் அனிதா தரப்பில் நீதிமன்றத்தில் மென்ஷன் செய்து, ‘கைது செய்யவேண்டுமென்றால் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஆர்டர் காப்பியில் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு 2022 ஆகஸ்டு 4 ஆம் தேதி நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அமலாக்கத் துறை விசாரணைக்கு தடையில்லை. அதே நேரம் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அனிதாவுக்காக உச்ச நீதிமன்றத்தில் முகுல் ரோத்தகி
இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை விசாரணைக்கு விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதை ரத்து செய்யுமாறு அவர் உச்ச நீதிமன்றத்தில் கோரினார்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்காக இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் பிரபலமானவருமான முகுல் ரோத்தகி ஆஜரானார்.
“உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை காரணமில்லாமல் நீக்கியுள்ளது. இது முறையற்றது. அந்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படவில்லை என்றால் என் கட்சிக்காரர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை இரண்டு மாதங்களுக்கு நீடித்தது.
அதேநேரம், ‘அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு விரைவாக முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்கத் தவறினால் அல்லது தேவையற்ற ஒத்திவைப்புகளை கோரினால், இடைக்கால உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றமே சுதந்திரமாக முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
விரைவில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் சீற்றம்: மனுவை வாபஸ் பெற்ற அனிதா
இப்படி அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிரான மனு ஒருபக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்… தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தன் மீது தாக்கல் செய்த சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து 2017 இல் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக 5 வருடங்கள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி மேல் முறையீடு செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.
இந்த மேல் முறையீட்டு மனு உரிய விவரங்களைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லப்பட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில்தான் நவம்பர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கடுமையான கண்டனக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
‘என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஆட்சி மாறினால் நீதிமன்றமும் அரசு இயந்திரங்களும் மாறிவிட வேண்டுமா? ஆட்சி மாறுவதற்கும் இதுபோன்ற விசாரணைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் கட்சி உறுப்பினர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்கலாம்.
ஆனால் நீதிமன்றமும், அரசு இயந்திரமும் அப்படி அல்ல” என்று கேட்டிருக்கிறார். இதற்கு மேல் இந்த வழக்கை விசாரிக்க வேறு எதுவும் இல்லை என்று கொந்தளித்து விட்டார்கள் நீதிபதிகள். அவர்கள் இதையே உத்தரவாக பிறப்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை உணர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் அந்த மனுவையே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் தமிழக முதல்வர் வரைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் முதல்வரும் கடும் அப்செட் என்கிறார்கள்.
சட்டத்தின் முட்டுச் சந்தில் அனிதா
இப்போது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டிலும் சொத்துக் குவிப்பு வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு ஆகியவற்றில் கிட்டத்தட்ட அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் அமலாக்கத்துறை வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே அமலாக்கத்துறை அனிதாவின் ஆறு கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியிருப்பதால், விசாரணையைத் தொடர உறுதிபூண்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர்.

இதை வைத்து பார்க்கும்போது முன் ஜாமீன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அனிதா. ஆனால் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் இந்தியாவில் இதுவரைக்கும் யாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இப்படியாக சட்டத்தின் முட்டுச் சந்தில் நின்றுகொண்டிருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோரைப் போல தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் கைது செய்ய தீவிரமாக உள்ளது அமலாக்கத்துறை. எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் அனிதா கைது செய்யப்படலாம் என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
–வேந்தன்
நாடார் மகாஜன சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!
டிஜிட்டல் திண்ணை: கொடநாடு வழக்கு- எடப்பாடியை விசாரிக்க தயாராகும் ஐஜி தேன்மொழி