அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது!
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) காலை பைபாஸ் சர்ஜரி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் 3 இடத்தில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அமலாக்கத் துறை சார்பிலான இஎஸ்ஐ மருத்துவ குழுவும் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தது. கடந்த 15 ஆம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
செந்தில் பாலாஜிக்கு இன்று ஜூன் 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று ஜூன் 16ஆம் தேதியே மின்னம்பலத்தில் புலனாய்வு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த தேதியை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடுத்தினார்..
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ அறையில் இன்று காலை 5 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது.
மூத்த மருத்துவரும் இதயவியல் நிபுணருமான ரகுராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.
மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுபோன்ற மேஜர் சர்ஜரி செய்ய குறைந்தபட்சம் 3 மணி முதல் 5 மணி வரை தேவைப்படும். அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி கண்காணிக்கப்படுவார் என்று காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா: பட்டாணி – அவல் உப்புமா!
கவர்னரை நீக்க கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு முதல் கையெழுத்து!