நாட்டுப்புறக் கலைஞர்கள், ஓவியம், சிற்பம் வடிக்கும் கலைஞர்கள், மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் செய்பவர்கள், மண்பாண்டம் உள்ளிட்ட கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு சிறப்புக் கடன் திட்டத்தை மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கியுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் எல்லோருக்கும் கடன் கொடுப்பதில்லை.
அப்படியே கொடுத்தாலும் நாட்டுப்புற கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை.
அதனால், தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 சதவிகித வட்டியில் சிறப்புக் கடன் வழங்கும் என கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்திருந்தார்.
இந்தச் சிறப்புக் கடன் திட்டம் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளிக்கவும் உதவும் என்றார்.
தற்போது நாடகம், நாட்டியம், நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், ஓவியம், சிற்பம் வடிக்கும் கலைஞர்கள், மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் செய்பவர்கள்,
மண்பாண்டம் உள்ளிட்ட கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கியுள்ளது.
5 சதவிகித வட்டியில் ரூ 50,000 முதல் ரூ 3 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இதை மூன்று வருடத்துக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
அதேநேரம் இக்கடனை பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். ரூ. 50,000 வரைக்கும் தனிநபர் ஜாமீனும், அதற்கு மேற்பட்டு ரூ 3 லட்சம் வரையிலான கடனுக்கு சொத்து ஜாமீனும் வழங்க வேண்டும்.
இந்தக் கடனை நாட்டுப்புறக் கலைஞர்கள், பாரம்பரிய இசைக்கருவிகள், கலைப்பொருட்கள் தயாரிப்பவர்கள் பெறுவதற்கு அவர்கள் தங்களை நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அல்லது கலை பண்பாட்டுத்துறையில் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இது இருந்தால் அனைத்து கிளைகளிலும் உடனே கடன் வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்