அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் கட்சியில் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக திமுக தலைமை இன்று(செப்டம்பர் 4) அறிவித்துள்ளது.
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும், தமிழ்நாடு அமைச்சரவையில், தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்துவருபவர் செஞ்சி மஸ்தான்.
இந்த நிலையில், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலியை அந்த பொறுப்பில் இருந்து விடுவிப்பதாகவும்,
அவருக்கு பதிலாக அந்த பதவியில் பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த ரோமியன் என்பவரை நியமனம் செய்வதாகவும் திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
அதே போன்று, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானும் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திமுக விளையாட்டு அணி மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட திமுகவிலும், அரசு நிர்வாகத்திலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினர் தலையீடு அதிகமாகி வருவதாக திமுகவினரே தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பிய நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினரே தெரிவிக்கிறார்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி ஜாமின் மனு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை: ஒருவர் கைது!