டிஜிட்டல் திண்ணை: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளுநர் நடத்திய முக்கிய ஆலோசனை!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக அரசின் 3 ஆண்டுகள் நிறைந்து நான்காம் ஆண்டு தொடங்குவது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”2021 மே 7ஆம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான் என்று கூறி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகி நான்காம் ஆண்டில் மே 7 ஆம் தேதி அடியெடுத்து வைக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பெரிய கொண்டாட்டங்கள் இன்றி விளம்பரங்கள் கூட ஏதும் இன்றி நடந்திருக்கிறது.

திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பல்வேறு அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் மே 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சுவாரசியம் என்னவென்றால் சில அமைச்சர்கள் அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழா என்பதைக் கூட மறந்து ஓய்வில் இருந்தனர்.

மே 7 ஆம் தேதி தன்னை சந்தித்த அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் இந்தியா கூட்டணி பிற மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தனக்கு வந்த ரிப்போர்ட்களின் அடிப்படையில் ஸ்டாலின் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்திலேயே பாஜக பின்னடைவை சந்திக்கும் என்றும், தேர்தல் முடிவுகளில் மோடி 200 சீட்டை தாண்ட மாட்டார் என்றும் ஸ்டாலின் தன்னை சந்தித்தவர்களிடம் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மற்றும் சில முக்கிய புள்ளிகளிடம் கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆளுநர் தன்னை சந்தித்தவர்களிடம், ’2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்கனவே கிடைத்த அளவு சீட்டுகள் கிடைக்காது என்று தகவல்கள் வருகின்றன. ஒருவேளை சீட்டுகள் எண்ணிக்கை குறைந்தாலும், மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்ததும் தமிழ்நாட்டில் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கடுமையான சட்ட நெருக்கடிகள் உண்டாகும்.

இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான புகார்கள் ஆதாரங்களோடு இருந்தால் அவற்றை சேகரித்து கொடுங்கள்’ என்று அந்த ஆலோசனையின் போது ஆளுநர் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகையில் நடப்பதை அறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

இப்படி ஒரு பக்கம் மோடி 200 சீட்டை தாண்ட மாட்டார் என்று ஸ்டாலின் நம்பிக்கையோடு இருக்கும் நிலையில்… சீட்டுகள் குறைந்தாலும் மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்றும், திமுகவுக்கு கடுமையான நெருக்கடி தருவார் என்றும் ஆளுநர்  நம்பிக்கையோடு  இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

10ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது? தெரிந்துகொள்வது எப்படி?

சவுக்கு சங்கர் உடல்நிலை : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

+1
0
+1
6
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0