கொரோனா பரவல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 11) எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து பேசினார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரொனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, “தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும். மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும். மருத்துவக் குழு அமைத்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸின் உருமாறிய புதிய வைரஸ் எக்ஸ்.பி.பி 1.16 மற்றும் பிஏ 2 என்கிற இரண்டு வைரஸும் புதிதாக பரவிக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதங்களில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பாதிப்பு 50-க்கும் கீழ் இருந்தது.
தமிழ்நாட்டில் குறைந்தபட்சமாக 2 என்ற எண்ணிக்கையில் தினசரி பாதிப்பு குறைந்தது. ஆனால் பரவல் அதிகரிக்கத் தொடங்கி நேற்றைய தினம் (ஏப்ரல் 11) 386 என்ற எண்ணிக்கையில் பதிவாகியிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,878 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2,273, டெல்லியில் 484, இமாச்சல் பிரதேசத்தில் 422, தமிழ்நாட்டில் 386 பேருக்கு கடந்த 24 நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கணொளி காட்சி வாயிலாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் தமிழ்நாட்டின் நடவடிக்கைகளை வெளிப்படையாகப் பாராட்டினார்கள்.
மார்ச் 21 ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இருக்க கூடிய 11,333 மருத்துவ கட்டமைப்புகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
ஏப்ரல் 2 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கிருந்த அனைவரும் 100 சதவீதம் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். மேலும் மத்திய அமைச்சரின் அறிவுறுத்தலின் படி நேற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இன்று 2வது நாளாக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனைகளில், படுக்கைகள், ஆக்சிஜன், அவசர ஊர்திகள், மருந்துகளின் கையிருப்பு போன்ற வசதிகள் இந்த ஒத்திகை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 2,067 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்ள முடியும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 64,251 படுக்கை வசதிகள் இருக்கின்றன. கொரொனா 2வது அலையின் போது படுக்கை வசதி அதிகமாக இருந்தது. இப்போது குறைவாக இருக்கிறது. மேலும் படுக்கை எண்ணிக்கை தேவைப்படுமெனில் 24 மணி நேரத்திற்குள் 1 லட்சத்து 48 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய முடியும்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையை தமிழ்நாட்டில் 342 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.
தற்போது பரவி வரும் எக்ஸ்.பி.பி 1.16 ஒமிக்ரான் வகை உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தொண்டை வலி, சளி, காய்ச்சல், உடல்வலி என்று மிதமான அறிகுறிகள் மட்டும் தான் இருக்கும்.
பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும். இப்போது பெரிய அளவிலான பதற்றம் இல்லை” என்று கூறினார்.
மோனிஷா
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கடந்து வந்த பாதை!
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்!