ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமே முதல்வராக உள்ளார்: மத்திய பாஜக குழு!

அரசியல்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திமுகவுக்கு மட்டும் முதல்வர் போல் செயல்படுகிறார் என்று மத்திய பாஜக குழுவில் இடம் பெற்றுள்ள ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் காவல் ஆணையரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, எம்.பி. பி.சி.மோகன் ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு செய்த பின் இன்று ஆளுநரை சந்தித்து பேசினர்.

இதன்பின் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய புரந்தேஸ்வரி, “நேற்று இரவு 12 மணி வரை 250 நிர்வாகிகளிடம் பேசினோம். சோஷியல் மீடியாவில் எதாவது செய்தியை பகிர்ந்தாலே அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர்.

ஒரு நிர்வாகி மீதான வழக்கு ரத்தான பிறகும் அவர் ஒரு மாதம் வரை சிறையில் இருந்திருக்கிறார்.

அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ளும் போது நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்யும் போது அவரை உடை மாற்ற கூட அனுமதிக்கவில்லை. உடை மாற்ற வேண்டும் என்றால் எங்கள் முன்பே மாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

பாதயாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என்று நாங்கள் உறுதியாக சொல்கிறோம்.

எங்கள் நிர்வாகிகள் எதாவது பிரச்சினை ஏற்பட்டு புகார் தெரிவிக்க சென்றால் அதனை ஏற்றுக்கொண்டு போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில்லை.

அண்ணாமலை வீடு முன்பு கம்பம் வைத்த விவகாரத்தில், 6 பேர் மீது வெளியே வரமுடியாத அளவுக்கு வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

அந்த பகுதியில் மசூதி இருக்கிறது. எனவே அங்கு இருக்கும் சிறுபான்மையினர் இங்கு பாஜக கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என சொல்கிறார்கள். நாங்கள் மசூதியில் இருந்து வெளியே வரும்போது பாஜக கொடியை பார்த்தால் எங்களால் தாங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாக சொல்கிறார்கள். அதனால் தான் அந்த கம்பத்தை எடுத்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் அந்த மசூதி அருகே திமுக கொடிக்கம்பம் இருக்கிறது. அவ்விடத்தில் பாஜக கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்றால் திமுக கொடிக்கம்பமும் அங்கு இருக்கக் கூடாதுதானே. அதையும் எடுக்க வேண்டியதுதானே.

திமுக  கொடிக் கம்பம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கிறது. ஆனால் பாஜக கொடிக்கம்பம் என்பது தெருவுக்குள், அண்ணாமலை வீட்டின் சுவர் அருகில் இருந்தது. அதை ஏன் அகற்ற வேண்டும்.

எங்களுடைய பெண் நிர்வாகிகளை, பெண் போலீசார் இல்லாமலே அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்திருக்கின்றனர். 120 பேர் கைது செய்யப்பட்டதில் அதில் 19 பேர் பெண்கள். அங்கு கழிவறை வசதி கூட இல்லை. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு சிறிய பிரச்சினைக்கு சம்பவ இடத்துக்கு கமிஷனர் வந்திருக்கிறார். அவர் வந்ததும், சொன்ன மூன்று வார்த்தைகள் இவைதான். கைது, லத்தி சார்ஜ், பேருந்தில் ஏற்றுங்கள் என்பதாகும்.

இதனால் போலீஸ் படை கூட திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆளுநரிடம் பேசினோம். இந்த அறிக்கையை பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் வழங்கவுள்ளோம்.

ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வர் போல் செயல்படவில்லை. திமுகவுக்கு மட்டும் முதல்வர்  போல் செயல்படுகிறார். முதல்வரின் முதன்மை கடமையே தமிழ்நாட்டின் மக்களை பாதுகாப்பது தான். ஆனால் திமுகவை தவிர மற்ற கட்சிகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை” என்று கூறினார்.

ஆளுநரை சந்தித்தது குறித்து சதானந்த கவுடா கூறுகையில்,  “ஆளுநர் எங்களுக்கு சாதகமாக பதிலளித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்த விவகாரத்தை விசாரிப்பதாக அவர் கூறினார். பாஜக தொண்டர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆளுநர் ஆர்.என்.ரவி – பாஜக மத்திய குழு நேரில் சந்திப்பு!

யுபிஐ வசதியுடன் அறிமுகமான ‘Nokia 105’ கிளாசிக்: விலை எவ்வளவு?

14 மாவட்டங்களில் கனமழை!

+1
1
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *