“ஆந்திராவைப் போன்று தமிழகத்திலும் மாமனாரைக் கவிழ்த்துவிட்டு, மருமகன் ஆட்சிக்கு வரப்போகிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலையில் நேற்று (ஆகஸ்ட் 26) அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பருவமழை தொடங்கும் நிலையிலும், மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை திமுக அரசு முடுக்கிவிடவில்லை. இதனால், சென்னையில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். அதிலும் லேசான மழைக்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிமுக ஆட்சியில் கால்வாய் நீரில் யாரும் நடந்து வந்ததாக சரித்திரம் கிடையாது. ஆனால் இன்று கால்வாய் தண்ணீரில்தான் நடக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து வந்தது கடிதம் அல்ல; மொட்டை கடுதாசி.
அதில் டிஜிபி அலுவலக சீல் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்த தமிழக காவல் துறை இன்று, கூனிக் குறுகி நிற்கிறது.
முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையாக காவல் துறை மாறியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவரது உறவினர்களைச் சமாதானம் செய்துவிடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இதில் ஒட்டுமொத்த கிளைமாக்ஸாக ஆந்திராவைப் போன்று மாமனாரைக் கவிழ்த்துவிட்டு, மருமகன் ஆட்சிக்கு வரப்போகிறார். இது நிச்சயம் நடக்கும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஸ்டெர்லைட் அறிக்கையை அரசே லீக் செய்ததா? ஜெயக்குமார் கேள்வி!