கோவைக்கான தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக அரசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், சிட்டிபாளையத்தில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின்,
“வங்கதேசத்துடன் பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும் - துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது. இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே, திமுக தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே, எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது. இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6,500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது.
தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள்.
இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்.
எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள்.
அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது. தமிழ்நாட்டு வளர்ச்சிகளைத் தடுத்தவர்களுக்கு பதில் வருகிற 19–ந் தேதி கிடைக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது.
இப்படி “கோவை வேண்டாம்” – “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி”. தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும்.
பா.ஜ.க.கூட்டணியையும், பா.ஜ.க.வின் B-டீமான அ.தி.மு.க .கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும். இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…