20 வருஷ பகை வஞ்சம் தீர்க்குமா இந்தியா?…மைதானம் யாருக்கு சாதகம்?

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

நாளை மறுநாள் நவம்பர் 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை இறுதி போட்டியில் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி அரையிறுதி உட்பட தான் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. அதே நேரம் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுகளில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுடன் தோல்வியை சந்தித்து 7 வெற்றிகளுடன் அரையிறுதியில் நுழைந்து தென் ஆப்பிரிக்காவை பழி தீர்த்து 8 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

கங்குலி Vs ரிக்கி பாண்டிங்

இந்த 20 வருட போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. 2003-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து. அதே நேரம் கங்குலி தலைமையிலான இந்திய அணி 8 வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டது. அதேபோல இந்த 2023 தொடரில் இந்திய அணி 10 வெற்றிகளுடனும், ஆஸ்திரேலிய அணி 8 வெற்றிகளுடனும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. (வரலாறு திரும்புகிறதா?)

ரோஹித் Vs கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 உலகக்கோப்பை இறுதி போட்டிகளில் விளையாடி அதில் 5-ல் கோப்பை வென்றுள்ளது. தற்போது தன்னுடைய 8-வது உலகக்கோப்பை இறுதி போட்டியில் அந்த அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் விளையாட இருக்கிறது.இந்தியை அணியை பொறுத்தவரை இதுவரை 3 உலகக்கோப்பை(1983-கபில் தேவ், 2003-சவுரவ் கங்குலி, 2011-எம்.எஸ்.தோனி) இறுதிப்போட்டியில் விளையாடி அதில் 2 முறை கபில்தேவ், தோனி தலைமைகளின் கீழ் கோப்பை வென்றுள்ளது. இந்திய அணியை 4-வது முறையாக கேப்டன் ரோஹித் சர்மா இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

நேருக்கு நேர்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை நேருக்கு நேர் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலிய அணி 83 முறையும் இந்திய அணி 57 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு அணிகளுக்கும் நேருக்கு நேராக 13 முறை மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.

நரேந்திர மோடி மைதானம்

இதுவரை 32 ஒருநாள் போட்டிகள் இங்கு நடைபெற்று இருக்கின்றன. இதில் முதலாவது பேட்டிங் செய்த அணி 17 முறையும், 2-வதாக பேட்டிங் செய்த அணி 15 முறையும் வென்றுள்ளன. இதனால் டாஸ் இந்த மைதானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இங்கு அதிகபட்ச ஸ்கோர் 365. குறைந்த பட்ச ஸ்கோர் 85. ஆவரேஜ் பர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் 260 ஆக உள்ளது.

பேட்டிங், சேஸிங் இரண்டிலுமே முதல் 10 ஓவர்கள் இந்த மைதானத்தில் விளையாடுவது கடினமாக இருக்கும். அதேபோல பேட்டிங், பீல்டிங் இரண்டுக்குமே இந்த மைதானம் நன்கு ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்

பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித், கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

விராட் கோலி

3 சதங்கள் 5 அரை சதங்கள் உட்பட 711 ரன்களை குவித்து விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 50 சதம் என்ற உலக சாதனையும் சமீபத்தில் கோலி படைத்தார். கோலியின் இந்த பார்முக்கு அவர் இறுதிப்போட்டியில் இன்னொரு சதம் அடித்தாலும் ஆச்சரியமில்லை.

ரோஹித் சர்மா

கேப்டன் ரோஹித் சர்மா 1 சதம் 3 அரை சதங்களுடன் 550 ரன்களை இந்த தொடரில் குவித்துள்ளார். குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் 50 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த 2023 தொடரில் அவர் 28 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில் 21 சிக்சர்களை அவர் பவர் பிளேயில் அடித்திருக்கிறார். மேலும் எல்லா பவுலர்களுக்கு எதிராகவும் அவர் சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த தொடரில் 2 சதம் 3 அரை சதங்கள் உட்பட 550 ரன்களை குவித்துள்ளார். இறுதி போட்டியில் மீண்டும் ஒருமுறை சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த கூடும்.

கே.எல்.ராகுல்

1 சதம் 1 அரை சதத்துடன் 386 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் ராகுல் அசத்தி வருகிறார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ராகுல் பறந்து, பறந்து பந்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில்

இதுவரை சதம் அடிக்கவில்லை என்றாலும் கூட 4 அரை சதங்களுடன் 350 ரன்களை கில் குவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பவுலிங்

மொஹமது ஷமி இதுவரை 23 விக்கெட்டுகளுடன் இந்த தொடரில் அதிக விக்கெட் வேட்டை நடத்தி இருக்கிறார். மேலும் இதுவரையிலான உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்னும் புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார். அதோடு இந்த தொடரில் 4 முறைக்கு மேல் 5 விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார்.

பும்ரா

பும்ரா ஒட்டுமொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறைவான விக்கெட்டுகளை வீழ்த்தியது போல தெரிந்தாலும் இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் வீசிய 497 பந்துகளில் 335 பந்துகள் டாட் பால்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 10 பந்துகளை அவர் வீசினால் அதில் 6 பந்துகள் டாட் பால்கள் ஆகும்.

ஜடேஜா

அதேபோல ஆல்ரவுண்டர் ஜடேஜா 16 விக்கெட்டுகளையும், குல்தீப் 15 விக்கெட்டுகளையும், மொஹமது சிராஜ் 12 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் கைப்பற்றி இருக்கின்றனர். பேட்டிங், பீல்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டர் ஆக கலக்கும் ஜடேஜா மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை இறுதி போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும்.

கடினமான தருணங்களில் அணியை காப்பாற்ற கூடிய வல்லமை கொண்டவர் ஜடேஜா என்பதை சமீபத்திய ஐபிஎல் இறுதி போட்டியில் கூட அவர் நிரூபித்து இருந்தார்.

சிறந்த வீரர்கள்

இறுதி போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் துருப்பு சீட்டாக விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணியின் துருப்பு சீட்டாக பேட் கம்மின்ஸும் இருப்பார்கள் என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

சுழற்பந்து

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சுக்கு அவர்கள் தடுமாறுவது சமீபத்திய போட்டிகளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவுடனான அரையிறுதி போட்டியில் கூட சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் இந்திய அணியின் ஸ்பின்னர் குல்தீப் ஆஸ்திரேலிய பேட்டிங்கை சிதறடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. முதல் லீக் போட்டியை போல அஸ்வினும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் குல்தீப், ஜடேஜா, அஸ்வின் கூட்டணியின் பந்துவீச்சை சமாளிப்பது தான் அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

டேவிட் வார்னர்

528 ரன்களை நடப்பு தொடரில் குவித்துள்ள டேவிட் வார்னர், தனி ஒருவனாக ருத்ரதாண்டவம் ஆடி அணியை மீட்ட கிளேன் மேக்ஸ்வெல், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரை சதம் கடந்த ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை குவிக்கக்கூடும். பந்துவீச்சை பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் இருவரும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள்.

கவுதம் கம்பீர்

இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித், கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் ‘கேம் சேஞ்சராக’ இருந்து இருந்து அணியின் வெற்றிக்கு உதவுவார்.குறிப்பாக ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சுழற்பந்துகளை எதிர்கொள்ளக்கூடிய திறமை அவருக்கு உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலான விஷயம். மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்திருப்பர். அவர்கள் ஆதரவு முழுக்க இந்திய அணிக்கே இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி

இந்த மைதானத்தில் சுமார் 1,32,000 ரசிகர்கள் அமர்ந்து இறுதிப்போட்டியை பார்க்க இருக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இறுதிப்போட்டியை நேரில் காணவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸ்-க்கும் போட்டியை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோனி 

இதேபோல இதற்கு முன்னர் உலகக்கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், எம்.எஸ்.தோனி ஆகியோர் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல மற்ற நாடுகளில் இருந்தும் உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்கள் இந்த போட்டியை நேரில் காணவிருக்கின்றனர்.

மழை

போட்டி நடைபெறும் நாளன்று வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வெதர் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

வெற்றி மாலை யாருக்கு?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டியில் வென்று இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

இந்திய அணி உத்தேச வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்/ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, மொஹமது ஷமி, மொஹமது சிராஜ்.

ஆஸ்திரேலியா அணி உத்தேச வீரர்கள்

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், டிராவிஸ் ஹெட் , ஜோஸ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கிளேன் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் ஜாம்பா.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரயில்வே போர்டு உறுப்பினர் பயணிக்க தனி ரயிலா? – சு.வெங்கடேசன் கேள்வி!

’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *