நா.மணி
வானத்தை வனமாக மலரவைத்த, சிற்றுயிரிகள் முதல், சிங்கம், புலி,கரடி, யானைகள் வரை. அரும்புகள் முதல் ஆகாயம் வரை உயர்ந்து நிற்கும் மரங்கள் வரை ஓர் வன உயிர் கோளம். அந்த வன உயிர் கோளத்தில், மற்ற சக ஜீவராசிகளைப் போலவே வாழ்ந்து வந்த மனிதர்கள் எப்போது அந்த வனத்திற்குள் சென்றார்கள்? வனத்தில் வாழும் உயிரினங்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்று எப்படி கற்றுக் கொண்டார்கள் ? எத்தனை ஆண்டுகள் அதற்கு எடுத்துக் கொண்டன?…. இவையெல்லாம் பெரிய பெரிய கேள்விகள்.
விடைகளைத் தேடிச் சென்றால் ஆச்சரியம் ஊட்டும் விசயங்கள் ஏராளம் நமக்கு கிடைக்கும். சமவெளி மனிதர்கள் காட்டுக்குள் நுழைந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அதிலும் குறிப்பாக வெள்ளையர்கள் வருகைக்கு பிறகு அவர்களும், அவர்களது அடியொற்றி நாமும் செய்த வன ஆக்கிரமிப்பு, வன அழிப்பு எவ்வளவு? இந்தக் காலகட்டத்தில் இருந்தே வனத்தின் ஆதி குடிகளின் சீரழிவுகளும் தொடங்குகிறது. ஆக சமவெளி மனிதர்களின் ஆக்கிரமிப்புக்கு வனத்திற்குள் வாழ்ந்து வந்த பழங்குடிகள் எத்தனையெத்தனை மாற்றங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்?
வன நில வகைப்பாடு
வன நிலத்தை அளந்து, வன நிலம், அரசுப் புறம்போக்கு நிலம், வருவாய் பட்டா நிலம் எனப் பிரித்து கல் நட்டது முதலே பழங்குடிகளின் பிரச்சினைகள் தொடங்குகிறது. வன நிலத்தில் வாழும் வந்தேறிகளாக அம்மக்களை மாற்றியது. அந்த வனம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று நம்பிக்கொண்டிருந்த பழங்குடிகளை ஆக்கிரமிப்பாளர்களாக அந்த அளவீடுகள் காட்டியது. பழங்குடிகளின் ஒருபகுதி நிலம் வன நிலம் என்றும், மறுபாதி நிலம் தரிசு நிலம் என்றும் வரையறை செய்யப்பட்டது. பட்டா நிலம் என்னும் பட்டியலுக்குள் வந்தது பழங்குடிகளின் சொற்ப நிலங்கள் மட்டுமே.
வன நிலம் என்ற சிக்கலுக்கு தீர்வு
பழங்குடிகள், வன நிலத்தில் குத்தகைக்கு உழுவதாகவும், வன நிலத்தில் வாடகைக்கு குடியிருப்பதாகவும், கருதப்பட்டு வந்தது. இந்த நீண்ட கால பிரச்சனைக்கு 2006 ஆம் ஆண்டில் ஓர் தீர்வு கிடைத்தது. வன உரிமை சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி, பழங்குடிகள் குடியிருக்கும் வீடு, சாகுபடி செய்யும் நிலம் அவர்களுக்கு உரியதாக மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டம் இயற்றப்பட்டு 16 ஆண்டுகள் கழித்து இப்போது தான் வன நிலத்தை வன மக்களுக்கு திருப்பி கொடுக்கும் காலம் வந்துள்ளது தமிழ் நாட்டில். ஏதோ ஒரு வகையில் எத்தனையோ ஆண்டுகள் கழித்து தீர்வை நோக்கி நகரும் தருணம் வந்துள்ளது. ஆனால், அவர்களின் சாகுபடி நிலங்கள் தரிசு நிலங்கள் என்று பெயர் சூட்டப்பட்டது அப்படியே நீடிக்கிறது.
பி மெமோ நிலங்களின் நிலை என்ன?
வருவாய் துறையின் தயவில் பி மெமோ என்னும் ரசீதை ஆதாரமாகக் கொண்ட இந்த நிலங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். நூற்றாண்டு காலம் சாகுபடி செய்து கொண்டிருந்தவர்களை தவிர்த்து, சமவெளியில் இருந்து வந்து கையூட்டு கொடுத்தவர்களே இந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக சாகுபடி செய்து வருகின்றனர் என்று பி மெமோவை மாற்றிப் போட்டு பின்னர் பட்டா போட்டு கொடுத்த வருவாய் துறையினர் வனம் முழுவதும் நிரம்பி இருக்கிறார்கள். இப்படியான வழிமுறையில் தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்து வந்தவர்கள் காவல் துறை உதவியோடு கதற கதற அடித்து துரத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஆதிகாலம் தொட்டு விவசாயம். ஆனால் அந்தஸ்து இல்லை
அரசாங்கத்தை கேட்டால் “அய்யோ பாவம் என்று அரசு புறம்போக்கு நிலங்களில் பி மெமோ பெயரில் சாகுபடி செய்ய அனுமதிக்கிறோம்” என்கின்றனர். பழங்குடிகளை கேட்டால் ” “இது இறைவன் எங்களுக்கு அளித்த அருட்கொடை. இது சிவ ஜமீன்” என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வனத்திற்குள் நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கிய பிறகு, வாழ்வாதாரம் தேடி, வன மக்கள் புலம் பெயர தொடங்கி விட்டனர். பழங்குடிகளில் ஒரு பகுதியினர், தங்களிடம் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்யவே சொந்த மண்ணுக்கு வருகிறார்கள். மீதமுள்ள நாட்களில் குடும்பத்தோடு குடி பெயர்ந்து விடுகின்றனர். உள்ளூரில் ஆறு மாதங்கள் வெளியூரில் ஆறு மாதங்கள் என வாழ்ந்து வருகின்றனர். இப்படி, பருவ மழை தொடங்கியது முதல், விவசாயம் செய்யவே சொந்த ஊருக்கு வருகின்றனர். பழங்குடிகள், விவசாய நிலங்களில் உழைத்து விளைவித்ததில் ,அவர்கள் வாழ்வதை காட்டிலும், மற்றவர்கள் இலாபம் அடைவதே அதிகம்.
பழங்குடி விவசாயிகளின் அவலம்
உழுதுவது முதல் அறுவடை வரை அத்தனைக்கும் கடன் வாங்குகின்றனர். கடன் கொடுத்தவன் சொல்லும் விலைக்கு அறுவடை நாளில் மூட்டைகளை கட்டி கொடுத்து விடுகின்றனர். உழுவதற்கு எவ்வளவு செலவு? விதை என்ன விலை? உரத்திற்கு எவ்வளவு செலவாயிற்று? பெரும்பாலான பழங்குடி விவசாயிகளுக்கு தெரியாது. கந்து வட்டி காரனும் தங்கள் வேளாண் விளை பொருட்களுக்கு விலை தீர்மானம் செய்து கொள்முதல் செய்து கொள்ளும் அந்த ஒற்றை மனிதருக்கு தான் இவற்றின் விலைகள், செலவுகளின் அளவுகள் தெரியும். பழங்குடி விவசாயிகளுக்கு தெரிந்ததெல்லாம் எல்லாம் போக கையில் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது மட்டுமே.
இது, பழங்கால குத்தகை விவசாயிகளின் அவல நிலை. ஆனால், சுதந்திர இந்தியாவில், அமலாக்கம் செய்யப்பட்ட பல்வேறு விவசாயிகள் நலத்திட்டங்களுக்கு பின்னரும், இந்த இழி நிலை ஏன் பழங்குடிகளுக்கு தொடர்கிறது? தொன்றுதொட்டு பழங்குடிகள் விவசாயம் செய்து வந்தாலும் அவர்கள் அரசின் சட்டப்படி ‘விவசாயி’என்ற அங்கீகாரம் பெறவில்லை? இவர்கள் சாகுபடி செய்யும் நிலங்கள் பட்டா நிலம் இல்லை. ஒன்று வன நிலம், மற்றொன்று புறம்போக்கு நிலம். இரண்டும் பட்டா நிலம் இல்லை.
பழங்குடிகளின் சாகுபடி நிலத்தில் பெரும் பகுதி இத்தகைய நிலங்களே. பட்டியல் இன மக்கள் பழங்குடிகளுக்கு அரசு கொடுத்த நிபந்தனை பட்டா நிலங்கள் மிகவும் கொஞ்சம். அதேபோல் சொந்தமாக பட்டா நிலம் வைத்திருக்கும் பழங்குடிகளும் மிகவும் கொஞ்சம். மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகு வன நிலங்கள் என்று சொல்லப்பட்ட இவர்களது சாகுபடி நிலங்களுக்கு பட்டா கிடைக்கப் போகிறது. ஆனால் ‘சிவஜமீன்’ என்று அவர்கள் நம்பி வாழும் நிலங்களுக்கு எப்போது பட்டா கிடைக்கப் போகிறது? ஒரே அந்தகாரம் சூழ்ந்ததாகவே அவர்கள் வாழ்வு நீடிக்கிறது.
பட்டா இல்லாததால் விவசாயி என்ற அங்கீகாரம் இல்லை. அது இல்லாததால் விதை மானியம் இல்லை. உர மானியம் இல்லை. கிணறு கூட்டுறவு கடன் இல்லை. வங்கிக் கடன் இல்லை. கிணறு தோண்ட முடியவில்லை. கிணறு தோண்ட கிடைக்கும் மானியம் கிடைக்கவில்லை. மின்சார இணைப்பு கிடைக்கவில்லை. பிரதம மந்திரி சம்மான் நிதி வருடம் 6000 ரூபாய் கிடைப்பதில்லை. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வழியாக 11 கோடி விவசாயிகள் பலன் பெற்று உள்ளனர். இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பைசா கூட பழங்குடி விவசாயிகள் பலன் பெற முடியவில்லை.
அரசு பட்டா வழங்க தடை என்ன?
ஆண்டாண்டு காலமாக தங்களிடம் உள்ள நிலத்தை பி மெமோ என்னும் பெயரில் அரசு வைத்துக் கொண்டு உள்ளது. இதனை விவசாயிகளுக்கு பட்டா போட்டு கொடுப்பதை எது தடுக்கிறது? 1168 தமிழ் நாடு அரசின் ஆணை. 1989 ஆம் ஆண்டு நீலகிரியில் ஏற்பட்ட நிலச் சரிவு. இதற்கு காரணம் என்ன என்று கணக்கு பார்க்கும் போது, மலையில் சாகுபடி நிலத்தில் சாகுபடி செய்வதால் வந்த வினை என்று அந்த அறிக்கை சொல்கிறது. அந்த அறிக்கையை வைத்து தமிழ் நாடு அரசு தமிழ் நாடு முழுவதும் மலைப் பகுதியில் பட்டா கொடுத்து வந்ததை நிறுத்தி விடுகிறது. நீலகிரியில் வாழும் மக்கள் தான் சரிவில் சாகுபடி செய்தார்கள். ஈரோடு மாவட்டம் கடம்பூர், பர்கூர், ஆசனூர் பகுதியில் வாழும் பழங்குடியினர் யாரும் மலைச் சரிவுகளில் சாகுபடி செய்பவர்கள் அல்ல. மலைப் பகுதியில் இருக்கும் சமதளத்தில் சாகுபடி செய்பவர்கள்.
இந்த மலைப் பகுதியில் உள்ள சுமார் பத்தாயிரம் ஹெக்டேர் நிலங்களில், சுமார் நான்காயிரம் ஹெக்டேர் நிலம் புறம்போக்கு நிலம் என்னும் பெயரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் அவலம் தீர்ப்பது அவசர அவசிய கடமையாக அரசு கருத வேண்டும். நீலகிரி மலையும் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் மலையும் ஒன்றல்ல. அதன் பாறைகளின் தன்மை மண்ணின் தன்மை எல்லாம் வேறு. இது போலத்தான் தமிழ் நாட்டில் உள்ள இதர மண்ணும் மலைகளும். ஆனால் நீலகிரியை காட்டி தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த நிலங்களுக்கும் பட்டா கொடுக்கும் பணிகள் கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. இதுவரை பட்டா கொடுக்க வில்லையே தவிர சாகுபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கால் நூற்றாண்டு சாகுபடி, இந்தப் பகுதியில் மலைப் பகுதி சாகுபடி நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளுக்கு வித்திடவில்லை என்பதற்கு சாட்சியம்.
தேவையெனில் அரசு ஒவ்வொரு மலையின் தன்மையை ஆராய்ந்து கூட பட்டா கொடுக்கலாம். ஆனால் அதற்கும் கால் நூற்றாண்டுக்கு மேல் சென்றுவிட்டது. இந்த கால் நூற்றாண்டு காலத்தில் பழங்குடிகள், பழங்குடி மக்கள் சங்கங்கள் இதற்காக நடத்திய போராட்டங்கள். கொடுத்த மனுக்கள், செய்த செலவுகள் போட்ட தீர்மானங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு
நா. மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில்பணி!
பியூட்டி டிப்ஸ்: கற்றாழை ஜெல்… கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது சரியா?
Comments are closed.