நீட் தகுதித் தேர்வு மோசடியே… இதோ இன்னொரு சான்று!
பிரின்சு என்னாரெசு பெரியார்
ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும், மைனஸ் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மருத்துவ உயர் படிப்பில் சேரலாமாம்!
நீட் என்னும் பெயரால் தகுதித் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே மருத்துவ இளநிலை, முதுநிலை எதுவாயினும் பயில முடியும் என்று கடந்த 7 ஆண்டுகளாகக் கட்டாயப்படுத்தி பலரின் உயிரையும், மருத்துவக் கனவையும் பலி கொண்டு வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
நீட் தேர்வுக்காக அவர்கள் சொல்லும் அத்தனைக் காரணங்களும், சொத்தை வாதங்களே! தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவம் பயில வேண்டும் என்று சொல்லித் தான் நீட் தேர்வைக் கட்டாயப்படுத்தினார்கள்.
12 ஆண்டுகள் படித்துப் பள்ளிக் கூடத்தில் எடுத்த மதிப்பெண்கள் போதாது என்றார்கள். பல லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி அழுது தனியார் நிறுவனங்களில் ’கோச்சிங்’ எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையை நாடு முழுவதும் தோற்றுவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகமாக இதனை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
பணம் கட்டிப் படிக்க முடியாதவர்களும், மூன்று ஆண்டுகள் வரை செலவழிக்க முடியாதவர்களும் தங்கள் மருத்துவக் கனவை நசுக்கிவிட்டு, உயிரற்ற பிண்டங்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உயிரையே துறந்துவிட்டார்கள்.
இத்தனை கொடுமைகளைக் கண்டும் மனம் இரங்காததுடன், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்துக் கொண்டும், திமிர் வாதம் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் ஒன்றிய அரசும், ஆளுநரும்! கேட்டால் தகுதி போய்விடும், திறமை போய்விடும் என்றார்கள்!
நீட் என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே வகை செய்யும் என்று நாம் சொன்னபோது, இல்லை என்று மறுத்தவர்கள், அந்நிறுவனங்கள் கருப்பில் வாங்கிக் கொண்டிருந்ததை வெளுப்பாக்குவதற்கு வகை செய்து தந்தார்கள்.
இன்று வெளிப்படையாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன மருத்துவ இடங்கள்.
காரணம், நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவ இடம் என்ற நிலை இல்லாமல், நீட் தேர்வில் தேர்வாகியிருந்தால் போது, நீட்டிலேயே பிறரை விட மதிப்பெண் குறைவு என்றாலும் எவர் வேண்டுமானாலும், பணத்தைக் கொடுத்து இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை. இது எந்த வகையில் தகுதி என்ற கேள்விக்குப் பதிலில்லை.
அத்தனை தகுதி பார்த்துத் தானே, மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுத்தீர்கள். மருத்துவம் படித்துக் கல்லூரித் தேர்வுகள் எழுதிய பிறகு மருத்துவராகலாம் தானே என்றால், அங்கே நெக்ஸ்ட் என்னும் தேர்வு!
அதற்கு பிறகு மருத்துவத்திலேயே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் அங்கும் ஒரு நீட் (PG-NEET) என்றார்கள். மருத்துவ மேற்படிப்பில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டார்கள். மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு வைத்திருந்த In service quota – வைத் தூக்கினார்கள்.
அத்தனை இடங்களிலும் கல்லூரியைத் தாண்டி கோச்சிங் செண்டர்களுக்கு மாணவர்களை விரட்டுவது தான் ஒற்றை நோக்கமாக இருந்தது. பல லட்சம் செலவழிப்பதற்கு வழியில்லாதவர்கள் ஏன் படிக்கிறீர்கள் என்பது பார்ப்பன – பனியா கூட்டுக் கும்பல் எழுப்பும் கேள்வி?
பணமா தகுதியா?
ஒன்றிய அரசின் மருத்துவத் துறை அறிவித்திருக்கும் Zero Percentile என்பது இவர்கள் இத்தனைக் காலம் பேசிய அனைத்துமே அப்பட்டமான பொய் என்பதற்கான சான்று அல்லவா?
2018லேயே இப்படி ஒரு நிலைமை வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ உயர் படிப்புகளுக்காக நீட் எழுதியவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும், அதற்கும் குறைவாக எடுத்திருந்தாலும் மருத்துவ உயர் படிப்புகளில் சேரலாம் என்றால் என்ன பொருள்? நீ எப்படியோ போ, எனக்கு பணத்தைக் கொட்டி அழு என்பது தானே!
தேர்வு எழுதிய 200517 பேரும் அதாவது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்த 14 பேரும், அதற்கும் கீழ் மைனஸ் 40 (-40) மதிப்பெண்கள் வரை எடுத்த 13 பேரும் கூட மருத்துவ உயர் படிப்பில் தனியார் நிறுவனங்களில் சேரலாம் என்பது தான் ஒன்றிய அரசு தரும் செய்தி. இப்போது எங்கே போனது இவர்களின் தகுதி திறமை வாதம்?
மருத்துவக் கல்வியில் இளைநிலையில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் முதுநிலைக் கல்விக்குத் தகுதி உடையவர்கள் என்பதே நமது கருத்து. அந்த இரண்டு லட்சம் பேரும் மருத்துவக் கல்வியில் தேறியவர்கள் தான் என்பதால் அவர்கள் யாரும் தகுதி குறைந்தவர்கள் அல்லர் என்பது தான் உண்மை.
பிறகு எதற்கு இந்தத் தேர்வு என்பது தானே நம் கேள்வி. பன்னிரண்டாம் வகுப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்றவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை; மருத்துவக் கல்லூரியில் இளநிலை தேர்ச்சி பெற்றவர்கள் பிஜி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்றால், அவர்கள் கற்ற கல்விக்கும் நீட் தேர்வுக்கும் தொடர்பில்லை என்பது தானே பொருள். அது ஒரு சதி என்பதற்கு மிக எளிமையாக விளக்கம் ஆயிற்றே இது!
செருப்பை வைத்துக் கொண்டு அதற்கேற்ப காலை வெட்டும் மடத் தனம் அல்லவா இது! ஒரு தேர்வைக் கட்டாயப்படுத்தி, ஒட்டுமொத்தக் கல்வித் திட்டத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் மோசடி அல்லவா? இதற்குப் பின்னே இருப்பது சமூகநீதி ஒழிப்பும், கார்ப்பரேட் கொள்ளையும் தான் என்பது வெளிப்படை.
பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் வணிகமாக மாற்றப்பட்டிருக்கும் மருத்துவக் கல்வியை மீட்டெடுக்க வேண்டியது அவசியமும், அவசரமுமாகும்.
இந்தக் கொள்ளையைத் தடுக்க வேண்டுமானால், இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டுமானால் ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும் என்பது தான் சமூகநீதியாளர்கள், மருத்துவர்கள், மக்கள் நலனில் அக்கறையுடையோரின் கருத்தாகும்.
கட்டுரையாளர் குறிப்பு
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பொரியல்
நாடு முழுவதும் அனல் பறக்கும் ஐபோன் 15 விற்பனை!