வைஃபை ஆன் செய்ததும் கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடத்திய நிர்வாகிகள் கூட்ட போட்டோ வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் டைப் செய்ய தொடங்கியது.
“மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் கட்சியின் நான்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை செப்டம்பர் 22ஆம் தேதி கூட்டினார்.
இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ‘என்னுடைய இளம் வயதிலேயே கலைஞர் என்னை திமுகவுக்கு வருமாறு எனக்கு தந்தி கொடுத்தார். ஆனால் அப்போது நான் போகவில்லை. அரசியல் பற்றியே சிந்திக்கவில்லை. மிக தாமதமாகத்தான் அரசியலுக்கு வந்தேன். ஆனாலும் நம்மிடம் நேர்மை இருக்கிறது. நம்மை கூட்டணிக்கு அழைப்பதற்கான இன்விடேஷன் அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கோவையில் ஏற்கனவே நான் மூக்கு உடைபட்டிருந்தாலும்… மருந்து போட்டுக் கொண்டே மீண்டும் கோவையில் வந்து நிற்பேன். நாம் 40 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும்’ என்று பேசி இருக்கிறார்.
இதன் மூலம் கமல்ஹாசன் வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதை அவர் சூசகமாக வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுடன் நல்ல நெருக்கம், அமைச்சர் உதயநிதியுடன் நல்ல பழக்கம் கொண்ட கமல்ஹாசன் கோவையில் வைத்து இவ்வாறு பேசியிருப்பது தற்போது கோவை மக்களவை தொகுதியை கைவசம் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் 2019 மக்களவை தேர்தலில் இடம் பெற்ற கட்சிகளில் தற்போது ஐஜேகே மட்டுமே இல்லை. அன்று பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். அந்த வகையில் வருகிற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை கமல்ஹாசனுக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார் ஸ்டாலின். திமுக பலமாக இருக்கும் அந்த தொகுதியில் ஏற்கனவே நடிகர் நெப்போலியன் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்.
ஆனால் கமல்ஹாசன் கோவை தென்சென்னை மதுரை ஆகிய மூன்றில் ஒன்றையே குறி வைத்திருந்ததாக தெரிகிறது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு வானதி சீனிவாசனிடம் மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பு இழந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் திமுக கூட்டணியில் வரும் எம்.பி. தேர்தலில் ஒன்றே ஒன்றுதான் மக்கள் நீதி மய்யத்துக்கு என்று தகவல்கள் கிடைத்த அடிப்படையில்… கோவையை விரும்பி அதை சூசகமாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இதற்கிடையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக தமிழக உளவுத்துறையினர் 234 தொகுதிகளிலும் தீவிரமான ஒரு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் திமுக நிர்வாகியாக இருப்பவர்களில் செல்வாக்கானவர்கள், திமுக நிர்வாகியாக இருப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது சுற்றத்தினர், திமுகவில் உறுப்பினர்களாக மட்டுமே இருப்பவர்கள், எந்த கட்சியும் சாராதவர்கள், அந்தந்த வட்டாரங்களில் பொதுப் பணிகள் செய்து நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், செல்வம் மிக்கவர்கள் இப்படி சுமார் 10 வகைகளில் செல்வாக்கானவர்களின் பட்டியலை எடுத்து… ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் மூன்று ஆண்கள்- மூன்று பெண்கள் என மொத்தம் ஆறு பேரை கொண்ட பட்டியலை தருமாறு ஆட்சி மேலிடம் கேட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் உளவுத்துறையினர் ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் ஆறு பேர் கொண்ட பட்டியலை தீவிரமாக தயாரித்து வருகின்றனர். வருகிற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும்போது தேர்வில் இந்த பரிந்துரையும் முதன்மையாக பரிசீலிக்கப்படும் என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஆந்திராவின் விஜயகாந்த்… யார் இந்த பாலகிருஷ்ணா?
நெல்லை – சென்னை வந்தே பாரத் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?