அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 17 லட்சத்து 64,571 பேர் எழுதியிருந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவு செப். 7-ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் 9,93,069 பேர் தேர்ச்சியடைந்தனர்.
உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. அதே சமயம் இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்தது.
தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் நீட்டில் தோல்வியடைந்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதற்கு சரியான நீட் பயிற்சி வழங்காததே காரணம் என்று எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் குற்றம் சாட்டினர்.
எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
அதன்படி திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களிலும் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் அக்டோபர் மாதமே தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
நீட் தேர்வில் 104 மார்க் : அண்ணாமலை சொன்னால் சீட் கிடைக்குமா?