நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார காலகட்டத்தின் போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாயுடன் மூன்று பேரை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
அந்த நான்கு கோடி ரூபாய்க்கு அவர்களிடம் கணக்கு இல்லாத காரணத்தால் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த மூன்று பேரும் நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
இதனால் அந்த பணம் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்ற சர்ச்சை வெடித்தது.
பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டால் அதை வருமானவரித்துறை தான் விசாரிக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் வருமானவரித்துறையிடம் இந்த விவகாரத்தை ஒப்படைத்து விட்டது.
அதேநேரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்தை கைப்பற்றிய தாம்பரம் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் திருப்பமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து டெலிவரி செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது.
இது குறித்து மின்னம்பலம் டாட் காம் இதழில் உதயநிதி வீட்டுக்கு எதிரே பாஜக வேட்பாளர்களுக்கு போன 65 கோடி… சிக்கிய சிசிடிவி… சிக்குகிறாரா கேசவ விநாயகன் என்ற தலைப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தங்களிடம் உள்ள பணம் எங்கிருந்து டெலிவரி செய்யப்பட்டது என்ற கேள்விக்கு தாம்பரம் காவல்துறையினரை சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்திருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு எதிரே இருக்கக்கூடிய ஒரு நான்கு மாடி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அந்த நபர்கள். அங்கே அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் வைத்து தான் தங்களுக்கு நான்கு கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்த கட்டிடம் பாஜக நிர்வாகி கோவர்த்தன் என்பவருக்கு சொந்தமானது. அங்கே கீழ் தளங்களில் கொரியன் ரெஸ்டாரென்ட்டுகள் இருந்தன. நான்காவது தளத்தை பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் பயன்படுத்தி வந்தார் என்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், அந்த பணம் நயினாருடையதுதான் என்று கட்டிட உரிமையாளர் கோவர்தனும் போலீசிடம் சொல்லியிருப்பதாக தகவல்.
அந்த பணத்தை கொடுத்தவர்கள் யார் என்று விசாரணையில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனின் புகைப்படத்தை காட்டி கேட்டபோது பிடிபட்ட நபர்கள் இவரிடமிருந்துதான் வாங்கினோம் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் தாம்பரம் போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் ஒரு கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வருமாறு சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால், முதல் முறை அளித்த சம்மனுக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரானார். மீண்டும் இரண்டாவது முறை நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வருகிற மே 2 ஆம் தேதி, தாம்பரம் போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
மேலும் அவர், “அந்த பணத்தை எடுத்துச் சென்றவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் தான். ஆனால் அந்த பணம் என்னுடையது அல்ல. இந்த விவகாரத்தில் என்னை டார்கெட் செய்ய சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
“அதாவது தேர்தல் களத்தில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தேர்தலின் போது கைப்பற்றப்படும் பணம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் வராது, அதனால் இதில் தாங்கள் தலையிட முடியாது என்று அமலாக்கத்துறை பதிலளித்தது.
அமலாக்கத்துறை இதில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலும் தமிழ்நாடு காவல்துறை இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு காவல்துறை இதில் தீவிரம் காட்டுவதை அறிந்த நயினார் தரப்பினர் இந்த விசாரணையை ஸ்லோ டவுன் செய்வதற்காக சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக, அதிகாரிகள் ரீதியாக என இரண்டு வகைகளில் அவர்கள் முயற்சி எடுத்து இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்ட சிலரை அணுகி இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் இருக்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நயினார் ராஜேந்திரனுக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலம் இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளுக்கு மென்மையாக சில பிரஷர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், விசாரணை அதிகாரிகள் வட்டாரத்திலோ, ’இந்த வழக்கை முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இதில் என்னென்ன டெவலப்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது என்று முதலமைச்சருக்கு அறிக்கை சென்று கொண்டிருக்கிறது. எனவே இதில் எல்லாம் தலையிட முடியாது’ என்று கைவிரித்து விட்டனர். அதிகார வர்க்கம் அரசியல் வர்க்கம் என இரண்டு வகைகளிலும் நயினார் தரப்பு விடுத்த தூது முதல் கட்டமாக தோல்வி அடைந்து இருக்கிறது” என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
தமிழ்நாடு பாஜக வட்டாரங்களில் கேட்டபோது, “திமுக அரசின் போலீஸ் இதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். காரணம் இந்த விவகாரத்தில் அடுத்து அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் சம்மன் அனுப்பப்படலாம். ஏற்கனவே அண்ணாமலைக்கும் கேசவ விநாயகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தனது உட்கட்சி எதிரிகள் சிக்குவதை அண்ணாமலை அமைதியாக ரசிக்கிறார்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹாக்கி ஆர்வம் இருக்கா? உங்களுக்காகத்தான் இந்த சிறப்புப் பயிற்சிகள்!
”ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதி இல்லை” : பிரகாஷ் ராஜ்