நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடையை அகற்ற அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக எழுந்த புகாரில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இயங்கி வரும் மார் தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிலையத்திலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இங்கு தேர்வெழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்ற அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. கொட்டாரக்கரா காவல்நிலையத்தில் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாணவிகளிடம் இதுபோன்று நடந்து கொண்டதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மறுப்பு வெளியிட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் மாணவிகளின் உள்ளாடையை கழற்றச்சொன்னதாக 5 பெண் அதிகாரிகளை கொல்லம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் நீட் தேர்வு முகமையால் பணியமர்த்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் என்பதும் 2 பேர் மார் தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிலைய ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதுபோன்று, இந்தவிவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். தேசிய தேர்வு முகமையும் கேரளாவுக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பியுள்ளது.
இதனிடையே நீட் தேர்வு நடந்த அந்த தேர்வு மைய கல்லூரியை காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் கல்லூரிக்குள் புகுந்து ஜன்னல் கதவுகளை உடைத்து சூறையாடினர்.
~அப்துல் ராபிக் பகுருதீன்