கட்டுப்பாடுகள் நிறைந்த டயட், உடலை வருத்திக்கொண்டு கடைப்பிடிக்கும் டயட், அசைவத்தைத் தவிர்க்கும் டயட், கொழுப்பை மட்டும் உண்ணும் டயட் எனப் பலவகை டயட்டுகள் உள்ளன. இவை அனைவருக்கும் பொருந்துமா எனக் கேட்டால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், இந்த வாழைப்பூ பொரியல் அனைவருக்கும் பொருந்தும். வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். ரத்த அழுத்தம், ரத்தச் சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.
என்ன தேவை?
சிறிய வாழைப்பூ – ஒன்று
வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 5
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாழைப்பூவை மேல்தோல் உரித்து, நரம்பு நீக்கி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த வாழைப்பூ, வேகவைத்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை முட்டை பொரியல்
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா