சுகேஷ் சந்திரசேகர் சொன்ன தகவல்: கலக்கத்தில் ஆம் ஆத்மி

Published On:

| By Prakash

ஆம் ஆத்மி கட்சிக்கு தாம் 60 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக சுகேஷ் சந்திரசேகர் சொல்லியிருக்கும் கருத்து டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர், சமீபகாலமாக கூறிவரும் குற்றச்சாட்டுகளால் ஆம் ஆத்மி கலக்கத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீதும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (சிறையில் உள்ளார்) மீதும் தொடர்ந்து அவர் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.60 கோடி கொடுத்தேன் என அவர் தெரிவித்திருந்ததும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக ரூ.10 கோடி கொடுத்ததாக டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு சுகேஷ் கடிதம் எழுதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தேன். ஆம் ஆத்மி கட்சிக்கு நான் ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்” என்றார்.

அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாகவும் அவர் டெல்லி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்

இவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோமா: இனிகோ இருதயராஜ் விழாவில் மெய்மறந்த முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel