சம்பளமே வேண்டாம்: கோடம்பாக்கத்தை அதிர வைத்த அருள்தாஸ்

entertainment

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அருள்தாஸ்.

அவரது வெள்ளந்தி தனமான தோற்றமும், குரல்வளமும் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஒப்பனையில்லாமல் பொருந்திப் போனதால் பிஸியான நடிகராகி ஒளிப்பதிவை ஓரங்கட்ட காரணமாகிப் போனது.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு கதைக் களத்திற்கேற்ற கதாநாயகன் கிடைக்காமல் இயக்குநர் சீனுராமசாமி தடுமாறிய போது விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியவர் அருள்தாஸ். கொரோனா வைரஸ் பிரச்சினையில் தடுமாற்றம் கண்டு வரும் திரையுலகில் தங்கள் தகுதியையும், வியாபார அளவையும் கடந்து சம்பளம் வாங்கி கொண்டிருந்த நடிகர், இயக்குநர்கள் தங்கள் சம்பளத்தை அவரவர் வசதிக்கு ஏற்ப குறைத்து கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வருடம் இறுதிவரை தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வாங்கப் போவதில்லை என அறிவித்து தமிழ் சினிமாவை அதிர வைத்திருக்கிறார், அருள்தாஸ்.

அவரது அறிக்கை, மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமரா மேன், அதன் அடுத்த கட்டமாக கேமரா மேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான ‘நான் மகான் அல்ல’ தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்.

இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான். தற்போது உலகம் முழுக்க ‘கோவிட்-19’ என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது.

இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது.

இது ஒரு நல்ல துவக்கம். அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குநர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும். எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்த காலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *