கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அன்றைய தினமே கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றால், அக்கட்சியின் பெயர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பாக வெளியிட வேண்டும். கட்சியின் பெயரில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை.
அந்தவகையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் பட்டியல் இன்று (மே 11) தமிழ், ஆங்கில செய்தித் தாள்களில் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுமக்களுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அலுவலகம் மனை எண் 275, சீ ஷோர் டவுன், 8-வது அவென்யூ, பனையூர், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை – 600119-இல் அமைந்துள்ளது.
இந்தக் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யக்கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29 A-இன் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நிர்வாகிகள் பெயர் மற்றும் முகவரிகள் பின்வருமாறு:
தலைவர்: ஜோசப் விஜய்
பொதுச்செயலாளர் : ஆனந்து @ முனுசாமி
பொருளாளர் : வெங்கடராமணன்
தலைமை நிலைய செயலாளர்: ராஜசேகர்
இணை கொள்கை பரப்புச் செயலாளர்: தாஹிரா
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கு யாருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் அவர்கள் தங்களுடைய ஆட்சேபணையை அதற்குரிய காரணங்களோடு, செயலர் (அரசியல் கட்சி), இந்திய தேர்தல் ஆணையம், நிர்வாச்சன் சதன், அசோகா சாலை, புது தில்லி – 110001 என்ற முகவரிக்கு இந்த விளம்பரம் வெளியான 30 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தனது அறிக்கைகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்று மட்டுமே குறிப்பிட்டு வந்த விஜய், தற்போது இந்த விளம்பரத்தின் மூலம் ஜோசப் விஜய் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSK-வுக்கு எதிரான ஆட்டம்… கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம்… காரணம் என்ன?
பத்மபூஷன் விருதுடன் சென்னை வந்த பிரேமலதா… ரோடு ஷோவுக்கு தடை…அதகளமான ஏர்போர்ட்!