டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (மே 9, 2024) கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. தேர்தலைக் காரணம் காட்டி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று (மே 10, 2024) மதியம் 2 மணியளவில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா முன்பு வந்தது. அரசு தரப்பிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பஞ்சாபில் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங்கும் இதேபோல் ஜாமீன் கேட்டிருக்கிறார் என்று கூறி பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அது வேறு விடயம் என்று குறிப்பிட்டு அந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நபர் விடுதலை செய்யப்படுவதற்கு இதுவரையில் எந்த முன்னுதாரணமும் இல்லை என்று துஷார் மேத்தா கூறினார். இந்த விவகாரத்தை அத்தனை எளிதாகப் பார்க்க முடியாது என்று சொன்ன நீதிபதி, ”இந்த வழக்கின் விசாரணை தொடங்கி ஒன்றரை ஆண்டு காலம் கெஜ்ரிவால் வெளியில் இருந்தார். மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாகவே அல்லது பிறகோ கூட அவரது கைது நடந்திருக்க முடியும். இப்போது 21 நாட்கள்…இது எந்த பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்து இடைக்கால பிணை உத்தரவை வழங்கினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர் இந்த வழக்கைப் பற்றி பேசக் கூடாது. ஜூன் 2 ஆம் தேதி கண்டிப்பாக சரண்டர் ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜூன் 2 ஆம் தேதி அவர் சரண்டர் ஆவார் என்று நீதிபதி பதிலளித்தார்.
கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதிதான் வெளியாகிறது என்று சொல்லி, ஜூன் 5 ஆம் தேதி வரை உத்தரவை நீட்டிக்குமாறு கேட்டார். அதற்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, 48 மணி நேரத்திற்கு முன்பே தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிடும் என்று கூறி ஜூன் 1 ஆம் தேதி வரையே பிணை என்று கூறிவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்தில் முடிக்க முயற்சித்து, வாய்ப்பிருக்கும்பட்சத்தில் தீர்ப்பினையும் விரைவில் வழங்குகிறோம் என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!
பொன்முடி வழக்கு: ஜாமீன் பெற அவகாசம் நீட்டிப்பு!
சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!